Published : 19 Aug 2015 09:32 AM
Last Updated : 19 Aug 2015 09:32 AM

மேகேதாட்டு அணை தொடர்பாக அனைத்துக்கட்சி குழு 24-ம் தேதி பிரதமரை சந்திக்க முடிவு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டு வது உட்பட பல்வேறு பிரச்சினை கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி குழு வரும் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

அப்போது மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்ட கர்நாடகா வுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் நிர்வாக ஆணையம் ஆகிவற்றை அமைக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார்.

இதற்கு கர்நாடக அரசு மற்றும் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மேலும் கர்நாடக அரசின் உரிமையை நிலைநாட்டுவதற்காக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்பிக்கள் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து கர்நாடக அனைத்துக் கட்சி குழுவை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி சித்தராமையா மோடிக்கு இரண்டு முறை கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இது தொடர் பாக சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

அனைத்து கட்சி குழு வரும் 24-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், கர்நாடகாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க உதவ வேண்டும், நிவாரணம் வழங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.

இந்தக் குழுவில் க‌ர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனந்த் குமார், சதானந்த கவுடா, கர்நாடக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் அனைத்துக்கட்சி எம்பிக்களும் இடம்பெறுவார்கள்.

பிரதமர் மோடியிடம் கர்நாடக மக்களின் நலனையும், உரிமையையும் வலியுறுத்தி மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி பெறப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x