Published : 03 Feb 2020 09:31 AM
Last Updated : 03 Feb 2020 09:31 AM

மத ரீதியாக மக்களை பிரித்து பிளவை ஏற்படுத்துகிறது மத்திய அரசு: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மும்பை

மத ரீதியாக மக்களை பிரித்து அவர்களது ஒற்றுமையை மத்திய அரசு சீர்குலைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பையில் ‘மும்பை கலெக்டிவ்’ அமைப்பு சார்பில் கடந்த 2 நாட்களாக விவாதக் கூட்டம் நடைபெற்றது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

கடந்த காலங்களில் காலனி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியது நமது இயக்கம். மதவாதத்துக்கு எதிரான இப்போதைய போராட்டம், காலனி ஆதிக்க சக்திகளுடன் இணைந்து நின்றவர்களை வீழ்த்துவதற்கு எதிரான இயக்கமாகும். கடந்த காலங்களில் காலனி ஆதிக்க சக்திகள் மத அடிப்படையில் மக்களை பிரித்து அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றன. தமது ஆதிக்க தலைமை சோதித்த அதே வியூகத்தை இப்போது வகுப்புவாத சக்திகள் கையாள்கின்றன.

நம் நாட்டின் மதச்சார்பின்மை கட்டமைப்பு ஆட்டம் கண்டு வருகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. நமது அரசியல் அமைப்பு சட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்த மதவாத சக்திகள் முயல்கின்றன.

மதவாத திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து திணிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது. கடைசியாக அது கையில் எடுத்துள்ள ஆயுதம் குடியுரிமை திருத்த சட்டமாகும். இந்த சட்டமானது நாட்டு மக்களின் மதச்சார்பற்ற சிந்தனையை திசை திருப்பி நமது தேசியவாத இயக்க உணர்வை தூண்டி வருகிறது

குடியுரிமை திருத்த சட்டமானது நமது அரசியல் அமைப்பு சாசனத்துக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. மேலும் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலும் இந்துத்துவா சித்தாந்தத்தை திணிக்கும் வகையிலும் உள்ளது.

எனவே, குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சாசனத்தின்படி இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. கேரளாவை அடுத்து, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x