Last Updated : 01 Feb, 2020 05:38 PM

8  

Published : 01 Feb 2020 05:38 PM
Last Updated : 01 Feb 2020 05:38 PM

பொருளாதார வளர்ச்சி மீட்டெடுப்பைக் கைவிட்டது மத்திய அரசு: ப.சிதம்பரம் சாடல்; பட்ஜெட்டுக்கு மதிப்பெண் என்ன?

டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், வளர்ச்சியை வேகப்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்றவற்றை மத்திய அரசு கைவிட்டுவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொழில்துறையினருக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், ஏராளமான சலுகைகளையும், வருமான வரி விலக்கு உச்சவரம்பையும் பட்ஜெட்டில் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் கேட்ட மிகப்பெரிய பட்ஜெட் உரை நிர்மலா சீதாராமனுடையதுதான். ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. 2020-21-ம் ஆண்டில் வளர்ச்சி இருக்கும் என்று யாரும் நம்பும்விதமாக இல்லை. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை வளரும் என்பது வியப்புக்குரியதாகவும், பொறுப்பற்றதாகவும் இருக்கிறது,

பொருளாதாரத்தை மீட்டெடுத்தலில் மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் சீர்திருத்தங்களுக்கு வழங்கப்பட்ட எந்த ஆலோசனையையும், கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையாக நிராகரித்துள்ளார்.

உண்மையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் படித்தாரா? பட்ஜெட் உரைக்கு தலைமைப் பொருளதார ஆலோசகர் ரகசியமாக உடன்படுகிறாரா? இந்த இரு கேள்விகளுக்கும் பதில் எதிர்மறையாகத்தான் இருக்கிறது.


பட்ஜெட்டில் உள்ள கருத்துகள், பிரிவுகள், திட்டங்கள், பேச்சு ஆகியவை கேட்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிகப்பெரிய சலவைக்கடைக்காரர் பட்டியல் (லாண்டரி லிஸ்ட்) போன்று திட்டங்கள் இருக்கின்றன.

பட்ஜெட் திட்டங்களை நன்றாகப் புரிந்து கொண்டு மக்களிடம் பேசுவதற்கு பாஜகவின் தீவிர விசுவாசத் தொண்டருக்கும், எம்.பி.க்கும் தெரியாது, எடுத்துச் சொல்லவும் முடியாது.

தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் திட்டங்கள் தோல்வி அடைந்தால், பின் எவ்வாறு திட்டங்களுக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்க முடியும். பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், முதலீட்டை ஊக்கப்படுத்துதல், திறம்பட வழிநடத்துதல், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மத்திய அரசு கைவிட்டுவிட்டது.

இந்தியப் பொருளாதாரத்தில் தேவைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முதலீட்டுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு சவால்களையும் நிதியமைச்சர் அடையாளம் கண்டதாகத் தெரியவில்லை. நீங்கள் இதுபோன்ற பட்ஜெட்டைக் கேட்கவில்லை. இந்த பட்ஜெட்டுக்காக வாக்களித்து பாஜகவை ஆட்சியில் அமரவைக்கவும் இல்லை''.

இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

இதனிடையே மத்திய பட்ஜெட்டுக்கு ஒன்று முதல் 10 வரை என்ன மதிப்பளிப்பீர்கள் என்று சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், " 10 என்பது இரட்டை இலக்கம், ஒன்று மற்றும் பூஜ்ஜியம். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்யுங்கள்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x