Published : 01 Feb 2020 03:37 PM
Last Updated : 01 Feb 2020 03:37 PM
நாட்டின் உள்கட்டமைப்பு திட்டத்துக்காக 2020-21 ஆம் ஆண்டில் ரூ.103 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும், விரைவில் சரக்குப் போக்குவரத்துக் கொள்கை வெளியிடப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2020-21 ஆம் ஆண்டுக்காக மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
" 2020-21 ஆம் நிதியாண்டில் போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய உள்கட்டமைப்பு ரூ.103 லட்சம் கோடி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார்.
அந்த வகையில் ரூ.103 லட்சம் கோடி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. வீடு கட்டுதல், பாதுகாப்பான குடிநீர், சோலார் மின்சாரம், சுகாதாரம், ரயில்வேயை நவீனப்படுத்துதல், விமானம், மெட்ரோ பேருந்து, சரக்குப் போக்குவரத்து போன்ற திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் மூலம் கட்டுமானம், செயலாக்கம், மற்றும் பராமரித்தல் ஆகியவை மூலம் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
விரைவில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை வெளியிடப்படும். 2,500 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலையும், 9 ஆயிரம் கி.மீ. எக்னாமிக் காரிடர் திட்டமும் கொண்டுவரப்படும்.
2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு கடற்கரைச் சாலைகளும், 2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு எஸ்-1 சாலைகள் அமைக்கப்படும்.
டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 நெடுஞ்சாலைத் திட்டங்கள் 2023-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். 2024-ம் ஆண்டுக்குள் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
2019 மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 59.64 லட்சம் கி.மீ. அளவுக்கு சாலைகள் இருக்கின்றன. இதில் 1.32 லட்சம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.
விலை உயரும் பொருட்கள்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுவரில் பொருத்தப்படும் காற்றாடிகள், இறக்குமதி செய்யப்படும் சமையல் பாத்திரங்கள், சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட பீங்கான் குவளைகள், தட்டுகள், இரும்பு, உருக்கு, காப்பர் பாத்திரங்கள் ஆகியவற்றின் விலை உயரும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுவரில் பொருத்தப்படும் காற்றாடிகளுக்கான சுங்கவரி 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சமையல் பாத்திரங்கள், சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட பீங்கான் குவளைகள், தட்டுகள், இரும்பு, உருக்கு, காப்பர் பாத்திரங்கள் ஆகியவற்றின் சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்படும் செருப்பு வகைகள், வீட்டில் பயன்படுத்தப்படும் மரச்சாமான்கள் ஆகியவற்றின் சங்கவரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம் கச்சா சர்க்கரை, விலங்குகள் சாப்பிடப் பயன்படும் உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட பால், குறிப்பிட்ட மதுவகைகள், சோயா, சோயா புரோட்டின் ஆகிவற்றுக்கான சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறையும்''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT