Published : 01 Feb 2020 12:40 PM
Last Updated : 01 Feb 2020 12:40 PM

மத்திய பட்ஜெட் 2020: 25 சிறப்பம்சங்கள்

பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி

உலகிலேயே 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என, தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.1) தாக்கல் செய்து வருகிறார். அவரின் 2-வது பட்ஜெட் இதுவாகும். கடந்த ஆண்டைப் போலவே சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டுவந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

1. சரக்கு மற்றும் சேவை வரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை. இது தேசத்தை ஒன்றுபடுத்தியுள்ளது.

2. வர்த்தகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இல்லை.

3. பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி அமலாக்கம்.

4. 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர்.

5. புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத மைல்கல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

6. உலகிலேயே 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

7. முன்பு எப்போதும் இல்லாத வகையில் நேரடி அந்நிய முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

8. அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது இந்த பட்ஜெட். முயற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இது உள்ளது.

9. வேளாண் துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது.

10. வேளாண் துறையைப் போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையைத் தாராளமயமாக்கவும் 15 அம்சங்கள் கொண்ட செயல் திட்டம்.

11. மாநிலங்கள், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஊக்கம் அளிக்கப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்பு செட்டுகள்.

12. பாசனத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

13. உரங்கள் பயன்பாட்டில் சமநிலையை நிலைநிறுத்த நடவடிக்கை.

14. மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும், நமது வர்த்தகங்கள் ஆரோக்கியமானதாக அமையவும், அனைத்து சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் எஸ்சி-எஸ்டி பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இந்த பட்ஜெட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15. சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையின் திறன் மேம்பட்டிருப்பதுடன், அதிகாரிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பயனடைந்துள்ளனர்.

16. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

17. சுய உதவிக் குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு.

18. வேளாண் உற்பத்திப் பொருட்களை ரயில் மற்றும் விமானம் மூலம் பல்வேறு சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு வசதிகள்.

19. ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் அறிமுகம்.

20. ஒரு மாவட்டத்திற்கு ஒரு வேளாண் உற்பத்திப்பொருள் என்ற புதிய நோக்கிலான திட்டம்.

21. முதலீடற்ற இயற்கை வேளாண் திட்டம்.

22. வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சம் கோடி.

23. பால் பதப்படுத்துதல் அளவை இரட்டிப்பாக்க முடிவு.

24. மீன் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்க முடிவு.

25. வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஊரக வளர்ச்சிக்கு 1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x