Published : 01 Feb 2020 08:59 AM
Last Updated : 01 Feb 2020 08:59 AM
எம்.சண்முகம்
சபரிமலை வழக்கின் அடுத்தகட்டமாக மத நம்பிக்கைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் இடையில் தீர்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உச்ச நீதிமன்றம் தள்ளப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கேரள மாநிலம் பெரும் பிரச்சினைகளை சந்தித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 50-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில், சபரிமலை வழக்கு மட்டுமின்றி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பெண்களுக்கு எதிராக உள்ள தடைகளை எதிர்த்தும், முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் நுழையும் உரிமை, பார்சி பெண்களுக்கு அவர்களது மதச் சடங்கு நடைபெறும் இடங்களில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை, தாவூதி போரா முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு நடத்தப்படும் சடங்குகள் உள்ளிட்டவை குறித்தும் வழக்குகள் தாக்கலாகி உள்ளன.
இவற்றில் சட்டச்சிக்கல் அடங்கி இருப்பதால் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்குகள் மாற்றப்பட்டன. என்னென்ன விஷயங்களில் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்ற பட்டியல் அப்போது அளிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் பொதுப்படையாக இருப்பதால் இன்னும் தெளிவுபடுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரினர். அவற்றை மாற்றியமைக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
அப்போது, அரசியலமைப்பு சட்ட அடிப்படை உரிமையான அனைவரும் சமம் என்ற உரிமையை வழங்கும் பிரிவு 14, எந்த மதத்தையும் பின்பற்ற சுதந்திரம் வழங்கும் சட்டப் பிரிவு 25, மத விவகாரங்களை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்யும் உரிமையை வழங்கும் பிரிவு 26 ஆகியவற்றுக்கு இடையில் பெண்களின் உரிமையை முடிவு செய்யும் நிலையில் உச்ச நீதிமன்றம் உள்ளது என்று மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டினர். இந்த சட்டப் பிரிவுகளில் பொது அமைதி, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு மட்டுமே விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
எந்தெந்த விஷயங்களை 9 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்ய வேண்டும் என்று பொதுக்கருத்தை உருவாக்கி நீதிமன்றத்துக்கு அளிக்கும்படி வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கான கூட்டத்தை உச்ச நீதிமன்ற செயலாளர் ஏற்பாடு செய்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் பொதுக்கருத்தை எட்ட முடியவில்லை என்று தெரிவித்து, மீண்டும் வழக்கு விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது.
இத்தகைய இக்கட்டான நிலையில், வரும் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மீண்டும் கூடுகிறது. இதில், எந்தெந்த பிரச்சினைகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்ற பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எந்த விஷயத்தில் எந்த வழக்கறிஞர் வாதிடுவது என்பது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது.
சபரிமலை விவகாரம் இன்னும் விரிவடைந்து நாட்டின் பல்வேறு மத வழிபாட்டு உரிமைகள் குறித்த விவகாரமாக தற்போது மாறியிருப்பதால் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு விசாரணை மக்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT