Last Updated : 30 Jan, 2020 01:20 PM

 

Published : 30 Jan 2020 01:20 PM
Last Updated : 30 Jan 2020 01:20 PM

நிர்பயா வழக்கில் மரண தண்டனை பிப்.1-ல் இருக்குமா? டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் சிங் புதிய மனு

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள்: கோப்புப் படம்.

புதுடெல்லி

நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை வரும் பிப்ரவரி 1-ம் தேதி அன்று நிறைவேற்றும் நிலையில், அதை நிறுத்தி வைக்கக் கோரி குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் சிங் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அக்சய் குமார் சிங் சார்பில் நேற்று தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த சூழலில் தனது சட்ட வாய்ப்புகள் ஏதும் இன்னும் முடியவில்லை என்பதால், தூக்கு தண்டனையை நிறைவேற்றத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஜெயின் முன்னிலையில் இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் நான்கு பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கிற்கு மட்டும் அனைத்து விதமான சட்டக்கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இதில் குற்றவாளி வினய் குமார் நேற்று குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அக்சய் குமார் சிங் நேற்று தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் திறந்த வெளி நீதிமன்றத்தில் விசாரணை நடக்காது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் சேம்பரிலேயே விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

ஒருவேளை அக்சய் குமார் சிங்கின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும் பட்சத்தில் அவர் குடியுரசுத் தலைவருக்குக் கருணை மனுவைத் தாக்கல் செய்வார். இன்னும் ஒருமுறைகூட கருணை மனுவைத் தாக்கல் செய்யாததால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்துவார்

ஏற்கெனவே வினய் குமார் தாக்கல் செய்த கருணை மனு குடியரசுத் தலைவருக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஆகியவை இருப்பதால், திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ம் தேதி 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

ஏற்கெனவே ஜனவரி 22-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாலும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததாலும் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டு பிப்ரவரி 1-ம் தேதி நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x