Published : 16 Aug 2015 10:34 AM
Last Updated : 16 Aug 2015 10:34 AM

சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஆந்திராவில் 29-ம் தேதி முழு அடைப்பு: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வரும் 29-ம் தேதி முழு அடைப்பு நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கெனவே வரும் 28-ம் தேதி நடைபெற இருந்த இந்த போராட்டம், வரலட்சுமி விரதம் காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநில பிரிவினையின்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வேண்டும் என அப்போதைய பாஜக, ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்தியது. இதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் 5 ஆண்டுகள் வரை ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மாநிலங்களவையில் உறுதி அளித்தார். ஆனால் தற்போது பாஜக ஆட்சி அமைத்தும், இதுவரை ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வில்லை. ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்தும் பாஜ அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேவைப்பட்டால் கூட்டணியை முறித்து கொண்டு, மக்களுக்காக தெலுங்கு தேச கட்சி மத்திய அரசுடன் போராட்டம் நடத்தியாவது சிறப்பு அந்தஸ்தை பெற வேண்டுமென எதிர்க்கட்சிகள் தீவிரமாக விமர்சித்து வருகின்றன.

சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பொது கூட்ட நிகழ்ச்சியில், முனி கோட்டி எனும் தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்னும் இரண்டொரு நாட்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக விவாதிக்க உள்ளனர். இந்த விவாதத்துக்குப் பின்னர் கூட்டணியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த வாரம் திங்கள்கிழமை இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆந்திர மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. இதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர், சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதனால் முழு அடைப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி முழு அடைப்பு நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கும் அனைத்து எதிர் கட்சிகளும், அமைப்பினரும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. ஆனால் 28-ம் தேதி வரலட்சுமி விரதம் என்பதால், முக்கிய பண்டிகையின்போது பந்த் நடத்தினால் பொது மக்கள் பாதிப்படைவார்கள் எனும் கார ணத்தால் முழு அடைப்பு போராட் டத்தை வரும் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாக நேற்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சத்யநாராயணா ஹைதராபாதில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x