Published : 17 Aug 2015 09:41 AM
Last Updated : 17 Aug 2015 09:41 AM

படுக்கை, குளியல் அறைகளில் ரூ.24 கோடி பணம், நகைகள் பதுக்கல்: மேற்குவங்க அரசு இன்ஜினீயர், மகன் கைது

படுக்கை அறை, குளியல் அறை, கழிப்பறை, தண்ணீர் தொட்டியில் ரூ.24 கோடி பணத்தை பதுக்கி வைத்திருந்த மேற்குவங்க அரசு இன்ஜினீயரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளும், வங்கி, அஞ்சலக முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்குவங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், பாலி மாநகராட்சியில் பிரணாப் அதிகாரி என்பவர் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மாத ஊதியம் ரூ.45 ஆயிரம் ஆகும். ஆனால் அவர் பெரும் பணக்காரராக வலம் வந்தார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்ஜினீயர் பிரணாப் அதிகாரி குறித்து கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் அண்மையில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் நேற்றுமுன்தினம் பாலியில் உள்ள பிரணாப் அதிகாரியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' திரைப்படத்தில் வருவதுபோன்று அவரது வீட்டில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரதான படுக்கை அறையின் தரைத்தளத்தில் பெரிய பள்ளம் தோண்டி கட்டு கட்டாக பணம் புதைக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஒரு கழிப்பறை பயன்படுத்தாத நிலையில் இருந்தது. அந்த கழிப் பறையை தோண்டியபோது கத்தை கத்தையாக பணம் சிக்கியது.

குளியல் அறையின் மேற் பகுதி, பால்கனியின் தரைத் தளத்தில் புத்தம்புது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் மேற்பரப்பில் ஐநூறு ரூபாய் பரப்பப்பட்டிருந்தன.

போலீஸாரின் தேடுதல் வேட்டையின்போது அவரது மனைவி திடீரென வெளியே ஓடிவந்து வீட்டுக்குள் கொள்ளையர் கள் புகுந்துவிட்டதாக கூச்சலிட்டார். உடனடியாக அப்பகுதி மக்கள் வீட்டின் முன்பு கூடினர். ஆனால் உள்ளூர் போலீஸார் விரைந்து வந்து கூட்டத்தை விரட்டியடித்தனர்.

இதைத் தொடர்ந்து சுமார் 21 மணி நேரம் போலீஸார் சல்லடை போட்டு வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர். கைப்பற்றப்பட்ட பணத்தை சாக்குகள், இரும்பு பெட்டிகளில் அள்ளி நிரப்பினர். அவர்களால் பணத்தை எண்ண முடியவில்லை. உடனடியாக மூன்று பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன.

இதில் மொத்தம் ரூ.24 கோடி ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது. இதுதவிர பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வங்கி முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அங்கிருந்து தப்பியோட முயன்ற இன்ஜினீயர் பிரணாப் அதிகாரியை போலீஸார் கைது செய்தனர். தேடுதல் பணியின்போது போலீஸாரை தாக்க முயன்ற பிரணாபின் மகன் தமோயுவையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x