Published : 12 Jan 2020 08:43 AM
Last Updated : 12 Jan 2020 08:43 AM
வடக்கு எல்லையோரப் பகுதியில் எந்த நேரத்தில், எந்த விதத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ராணுவ தளபதி எம்.எம். நராவனே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நாங்கள் எதிர்கால போர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். வடக்கு எல்லையோரப் பகுதியில் எந்த நேரத்தில், எந்த விதத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.
எண்ணிக்கை முக்கியமல்ல, தரமே எங்களின் தாரக மந்திரம். பாதுகாப்பு பணியாளர்களுக்கான தலைவர் மற்றும் ராணுவ விவகாரங்களுக்கான துறை அமைப்பது மிகப்பெரிய பெரிய நடவடிக்கையாகும். இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். ராணுவத்தை பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்புக்கு நாங்கள் எப்போதும் விசுவாசமாக இருக்கிறோம். நாங்கள் எந்தச் சவாலையும் சிறப்பாக சமாளிப்போம்.
அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை எங்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை இனியும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம்.
தகுந்த படைகளுடன் அவர்களை எதிர்த்து போரிடுவோம். ராணுவ நடைமுறைகளின்படி சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தக்க பதிலடி கொடுக்கப்படும். இதற்கு முன்பு இருந்ததை விட இந்திய ராணுவம் இப்போது பலமாகவும், சிறப்பாகவும் உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க உத்தரவு கிடைத்தால் ராணுவம் உடனடியாக செயலில் இறங்கும். இது அனைத்தும் மத்திய அரசின் முடிவு. மத்திய அரசு விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவினுடையதாகும். அவசியம் ஏற்பட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிகப் பெரிய ஆபரேஷனை தொடங்க ராணுவம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT