Last Updated : 09 Jan, 2020 04:23 PM

 

Published : 09 Jan 2020 04:23 PM
Last Updated : 09 Jan 2020 04:23 PM

நிர்பயா வழக்கு; 1983-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒரே நாளில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: புதிய தூக்கு மேடைகள் தயார்

புனே

நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேருக்கு வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த 1983-ம் ஆண்டுக்குப் பின் இப்போதுதான் ஒரே நாளில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

மகாராஷ்டிராவை உலுக்கிய ஜோஷி-அபயங்கார் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு கடந்த 1983-ம் ஆண்டு மும்பை எர்ரவாடா மத்திய சிறையில் தூக்குத் தண்டனை ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் இப்போது நிறைவேற்றப்பட உள்ளது.

நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை திஹார் சிறை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். ஆனால், ஒரே நாளில் 4 பேருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது 37 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் நடக்க உள்ளது.

மும்பையில் கடந்த 1976-77 ஆம் ஆண்டில் நடந்த ஜோஷி-அபயங்கார் தொடர் கொலைகள் மும்பை மக்களை உலுக்கி எடுத்தன. ஒரு ஆண்டுக்குள் 10 பேர் கொல்லப்பட்டதால், மும்பை மக்கள் மனதை பதைபதைக்கச் செய்தது.

போலீஸார் நடத்திய பல கட்ட விசாரணையின் முடிவில், இந்தக் கொலையை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்தது செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுஹாஸ் சந்தாக் என்பவர் அப்ரூவராக மாறியதையடுத்து, குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்.

புனேவில் உள்ள திலகர் சாலையில் உள்ள அபிநவ் காலா மகாவித்யாலயா கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்து வந்த 4 மாணவர்கள்தான் இந்த 10 கொலைகளையும் செய்தனர். ராஜேந்திர ஜக்கால், திலிப் சுத்தார், சாந்தாராம் ஜக்தாப், முனாவர் ஹருன் ஷா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 1976-ம் ண்டு ஜனவரி 16-ம் தேதி இந்த 4 பேரும் தங்களி்ன் வகுப்பில் படிக்கும் சக மாணவரைப் பணத்துக்காகக் கொலை செய்தார்கள். அதன்பின் 1976 அக்டோபர் 31-ம் தேதி முதல் 1977, மார்ச் 23-ம் தேதிக்குள் பல்வேறு இடங்களில் 9 தொடர் கொலைகளை இந்த 4 பேரும் அரங்கேற்றினர். வீடுகளில் தனியாக வசிப்போர், தனியாக சாலையில் செல்வோர், பெண்கள் எனப் பலரையும் பணத்துக்காக கொலை செய்தார்கள். இறுதியாக மும்பையில் அபயங்கார் என்பவரின் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்யப்பட்ட பின்புதான் தீவிரம் அதிகரித்து மகாராஷ்டிராவை உலுக்கியது.

இந்தக் கொலைகளைக் கண்டுபிடிக்கச் சிறப்புப் படைகள் உருவாக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டது. பல குழுக்கள் நடத்திய விசாரணையின் முடிவில் தொடர் கொலைகளை நடத்தியது இந்த கல்லூரி மாணவர்கள்தான் என்பது தெரியவந்தது.

சுஹாஸ் சந்தாக் அளித்த தகவலின் அடிப்படையில் ராஜேந்திர ஜக்கால், திலிப் சுத்தார், சாந்தாராம் ஜக்தாப், முனாவர் ஹருன் ஷா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கொலை வழக்கில் அதிகபட்சமான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது மும்பை உயர் நீதிமன்றம். இதையடுத்து, கடந்த 1983-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி மும்பை எர்ரவாடா மத்திய சிறையில் 4 பேருக்கும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

திஹார் சிறை : கோப்புப்படம்

இந்தச் சம்பவத்துக்குப் பின் இப்போது நிர்பயா வழக்கில் ஒரே நாளில் 4 பேருக்கு வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திஹார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.

திஹார் சிறையில் இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடை மிகவும் பழமையானது. ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே தூக்கிலிட முடியும். இந்த முறை ஒரே நாளில் 4 பேர் தூக்கிலிடப் பட உள்ளனர்.
ஆதலால், தூக்கு மேடைகளை மாற்றி, ஒரே நேரத்தில் இருவரைத் தூக்கிலிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, புதிய தூக்கு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன " என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x