Published : 09 Jan 2020 12:22 PM
Last Updated : 09 Jan 2020 12:22 PM

நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல்: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிக்கை

புதுடெல்லி

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு சீராய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மருத்துவ மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. குற்றவாளிகள் 4 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தண்டனையை நிறைவேற்றக் கோரி நிர்பயாவின் தாயார் தாக்கல் செய்த மனுவை விசாரித்து டெல்லி நீதிமன்றம் நேற்று இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. அதில், வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். 14 நாட்களில் அவர்கள் சட்டரீதியான நிவாரணம் பெறலாம் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகளைச் சிறை நிர்வாகத்தின் தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மறு சீராய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடைசி நீதித்துறை வாய்ப்பு சீராய்வு மனுவாகும். இந்த மனு நிராகரிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. எனினும் மனுவை விசாரணைக்கு ஏற்பது பற்றி உச்ச நீதிமன்றம் ஏதும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x