Published : 09 Jan 2020 11:51 AM
Last Updated : 09 Jan 2020 11:51 AM
தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தாமல் குளிர்பதன கிடங்கில் மத்திய அரசு வைத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாகக் குறையும் என்று மத்திய அரசு கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரு காலாண்டுகளில் 5 சதவீதம் மற்றும் 4.5 சதவீதமாக வளர்ச்சி குறைந்த நிலையில், வரும் காலாண்டுகளில் பொருளாதார மந்த நிலையில் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உற்பத்தித்துறை, மற்றும் கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையில், வேலையின்மை, தேவைக்குறைவு போன்றவை பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 6.9 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாகக் குறையும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம்(என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது. கட்டுமானத்துறையில் கடந்த நிதியாண்டில் 8.7 சதவீத வளர்ச்சி இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 3.2 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக் குறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் மத்திய அரசைச் சாடியுள்ளார். அவரின் பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிகமான கவனம் அளிக்க வேண்டும். ஆனால், பொருளாதாரத்தை மேம்படுத்தும் விஷயம் குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரச் சூழல் சரியில்லை என்று உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பொருளாதார வளர்ச்சிக்குறைவு வர்த்தகர்கள், ஏழைகள், தினசரி கூலி வேலைக்குச் செல்வோர், மாத ஊதியம் பெறுவோர்,தொழிலாளர்கள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கும். இதுவரை இந்த சிக்கலைத் தீர்க்க மத்திய அரசு சார்பில் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை " எனச் சாடியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT