Last Updated : 08 Jan, 2020 01:10 PM

1  

Published : 08 Jan 2020 01:10 PM
Last Updated : 08 Jan 2020 01:10 PM

தயாராகிறது திஹார் சிறை 3-ம் எண்: நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற ஆயத்தம்

திஹார் சிறை : படம் |ஏஎன்ஐ

புதுடெல்லி

நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் தண்டனையை நிறைவேற்ற திஹார் சிறையில் 3-ம் எண் சிறை தயாராகி வருகிறது.

தண்டனையை நிறைவேற்றுவதற்காக உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் இருந்து தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணியாளர்(ஹேங் மேன்) பவான் ஜலாத்துக்கு அழைப்பு விடுக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மருத்துவ மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. குற்றவாளிகள் 4 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தண்டனையை நிறைவேற்றக் கோரி நிர்பயாவின் தாயார் தாக்கல் செய்த மனுவை விசாரித்து டெல்லி நீதிமன்றம் நேற்று இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. அதில், "வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். 14 நாட்களில் அவர்கள் சட்டரீதியான நிவாரணம் பெறலாம்" என்று நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டவுடன், குற்றவாளிகள் 4 பேரும் நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.

இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகளைச் சிறை நிர்வாகத்தின் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து திஹார் சிறையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 கைதிகளும் இனிமேல் தனித்தனி செல்களில் அடைக்கப்படுவார்கள். கைதிகள் இனிமேல் மற்ற கைதிகளுடன் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேசமயம், குற்றவாளிகள் 4 பேரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

குற்றவாளிகள் 4 பேரும் இனிவரும் நாட்களில் மிகுந்த கண்காணிப்புடன் நடத்தப்படுவார்கள். அவர்கள் உடல்நிலை, மனநிலை தொடர்ந்து பரிசோதிக்கப்படும்.

பவான் ஜலாத்

இவர்கள் 4 பேருக்கும் சிறை எண் 3-ல் தூக்கு தண்டனை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான கயிறுகள் அனைத்தும் பிஹார் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 4 குற்றவாளிகளையும் ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். அவ்வாறு நடந்தால், முதல் முறையாக 4 குற்றவாளிகளுக்கும் ஒரேநேரத்தில் தூக்கிலிட்டது இதுவாகத்தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் மீரட்டைச் சேர்ந்த தூக்கிலிடும் பணியாளர் பவான் ஜலாத் நிருபர்களிடம் கூறுகையில், "திஹார் சிறையில் 4 குற்றவாளிகளுக்குத் தூக்கிலிடும் பணி குறித்து எந்தவிதமான கடிதமும் எனக்குக் கிடைக்கவில்லை. என்னைத் தொடர்பு கொண்டால் அந்தப் பணியைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இதுகுறித்து எனது விருப்பத்தையும் கடிதமாக திஹார் சிறை அதிகாரிகளுக்கு எழுதி இருக்கிறேன்.

இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை கண்டிப்பாக வழங்க வேண்டும். அதுதான் சமூகத்துக்கு வலிமையான செய்தியை வழங்கும். குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணி எனக்கும், நிர்பயாவின் பெற்றோருக்கும், மற்றவர்களுக்கும் பெரிய நிம்மதியைத் தரும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x