Published : 06 Jan 2020 11:39 AM
Last Updated : 06 Jan 2020 11:39 AM
நாடுமுழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையை தூண்டிவிடும் முயற்சியில் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபடுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரம் ஏபிவிபி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘பல்கலைகழகத்தில் இடதுசாரிகள் மாணவர் அமைப்பினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். சுமார் 25 மாணவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்’’ என்று குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து இன்று த்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவங்களை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது. நாடுமுழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையை தூண்டிவிடும் முயற்சியில் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபடுகின்றனர். பல்கலைக்கழகங்களை போர்க்களமாக மாற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர். இது ஆபத்தான போக்கு’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT