Published : 05 Jan 2020 12:51 PM
Last Updated : 05 Jan 2020 12:51 PM

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான நன்கானா சாகிப் குருத்வாரா மீது தாக்குதல்: நிலைமையை ஆராய 4 பேர் குழு விரைகிறது

கோப்புப்படம்

சண்டிகர்

பாகிஸ்தானில் நான்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலை தொடர்ந்து நிலைமையை ஆராய 4 பேர் கொண்ட குழுவை சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி (எஸ்ஜிபிசி) அனுப்பவுள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ், பாகிஸ்தானில் லாகூருக்கு அருகில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தார். அங்கு வரலாற்று சிறப்பு மிக்க குருத்வாரா உள்ளது. சீக்கியர்களின் புனித தலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த குருத்வாரா மீது நேற்று முன்தினம் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சீக்கிய பக்தர்கள் மீது நூற்றுக்கணக்கானோர் கற்களை வீசி தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் குருத்வாராக்களை நிர்வகிக்கும் எஸ்ஜிபிசியின் தலைவர் கோவிந்த் சிங் லோங்கோவால் நேற்று கூறும்போது, “நன்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நிலைமையை ஆராய 4 பேர் கொண்ட குழுவை அனுப்ப உள்ளோம். அங்குள்ள சீக்கிய குடும்பங்களை இக்குழுவினர் சந்திப்பார்கள். பஞ்சாப் மாகாண முதல்வர் மற்றும் ஆளுநரையும் இக்குழு சந்திக்கும். இந்த விவகாரத்தை ஐ.நா. சபைக்கும் கொண்டு செல்வோம்” என்றார்.

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் பாதல் கூறும்போது, “இந்த தாக்குதலை கண்டிக்கிறோம். எங்களின் புனித தலங்கள் மீதான இதுபோன்ற தாக்குதலை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்றார். நன்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலை கண்டித்து பாஜகவினர் நேற்று டெல்லியில் ஊர்வலம் சென்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக முழுக்கமிட்ட இவர்கள் சாணக்கியபுரி காவல் நிலையம் அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதுபோல் பாகிஸ்தான் தூதரகம் அருகில் இளைஞர் காங்கிரஸார் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் மத்திய அரசு உடனே கொண்டு சென்று பக்தர்களுக்கும் குருத்வாராவுக்கும் போதிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனிடையே மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று கூறும்போது, “பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகின்றனர் என்பதற்கு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுவோருக்கு இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா என அறிய விரும்புகிறேன்” என்றார். இதனிடையே பாகிஸ்தான் அரசு நேற்று வெளியிட்ட செய்தியில், “சீக்கியர்களின் புனித தலம் சேதப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x