Published : 05 Jan 2020 11:52 AM
Last Updated : 05 Jan 2020 11:52 AM
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி தலைமையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு அமைக்கப்பட்டபின், அமைச்சர்களுக்கு இலாகா நேற்று ஒதுக்கப்பட்டது.
இதில் முக்கியமான துறைகளை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கு ஏற்கனவே துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட நிலையில் உள்துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தாக்கரே குடும்பத்தில் இருந்து நேரடி அரசியல் களத்துக்கு வந்து முதல்முறையாக எம்எல்ஏவாகிய முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுலா, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டாக இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. நீண்ட இழுபறிக்குப்பின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றபோது, அவருடன் காங்கிரஸ், என்சிபி கட்சி சார்பில் பாலசாஹேப் தோரட், நிதின் ராவத், ஏக்நாத் ஷின்டே, சுபாஷ் தேசாய், ஜெயந்த் பாட்டீல், சாஹன் பூஜ்பால் ஆகியோர் மட்டுமே கேபினெட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். ஆனால், எந்த அமைச்சருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.
ஆனால், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸுடன் இணைந்து ஆட்சி அமைத்த என்பிசி மூத்த தலைவர் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போது அளிக்கப்படவில்லை.
ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பின், மகாராஷ்டிர சட்டப்பேரவை கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி விரிவாக்கப்பட்டது. அதில் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இலாகா ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப்பின் அமைச்சர்களுக்கு இலாகா நேற்று ஒதுக்கப்பட்டு, அந்த பட்டியல் ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அனுப்பி வைத்தார். இந்த பட்டியலுக்கு ஆளுநர் கோஷியாரி ஒப்புதல் அளித்துள்ளார்.
அந்த பட்டியலின்படி, என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார், அல்லது ஜெயந்த் பாட்டீல் இருவரில் ஒருவருக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் பவாருக்கு நிதித்துறையும், திட்டமிடல் துறையும் ஒதுக்கப்பட்டது.
மாறாக என்சிபி கட்சியின் கடோல் தொகுதி எம்எல்ஏ அனில் தேஷ்முக்கிற்கு யாரும் எதிர்பாராத வகையில் உள்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.
முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, பொது நிர்வாகத்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித்துறை ஆகிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன.உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுலா, சுற்றுச்சூழல், ப்ரோட்டாகால் துறை ஒதுக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாலசாஹேப் தோரட்டுக்கு வருவாய்துறையும், மற்றொரு முக்கியத் தலைவர் அசோக் சவாலுக்கு பொதுப்பணித்துறையும் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT