Published : 04 Jan 2020 09:10 PM
Last Updated : 04 Jan 2020 09:10 PM
டெல்லியின் சட்டப்பேரவை தேர்தல் விரைவில்நடைபெற உள்ளன. இதில் போட்டியிட வாய்ப்பை அறிய அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஜோதிடர்களை சுற்றிவரத் துவங்கி உள்ளனர்.
டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் பிறகு எந்த நாளும் அதன் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியை பறிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மக்களவை தேர்தலில் டெல்லியின் ஆறு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி அதன் காரணம்.
இதேபோல், முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு முன்பாக ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து மூன்றுமுறை ஆட்சி செய்த காங்கிரஸும் டெல்லியை குறி வைத்துள்ளது.
இவர்கள் இருவரையும் நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்க ஆம் ஆத்மி கட்சியும் தயாராகி வருகிரது. இதனால் டெல்லியில் மீண்டும் மும்முனைப்போட்டி நிகழும் வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், பாஜகவின் சார்பில் டெல்லியில் போட்டியிட விரும்புபவர்கள் தமது வாய்ப்பை உறுதிசெய்ய விரும்புகின்றனர். இதற்காக, டெல்லியின் பிரபல ஜோதிடர்களிடம் தமது ஜாதகங்களுடன் அணுகி வருகின்றனர்.
இதில், ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களை செய்து பாஜகவில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதில் தீவிரம் காட்டுகின்றனர். இதனால், டெல்லியின் பிரபல ஜோதிடர்கள் இடையே அதிக சுறுசுறுப்பு கிளம்பியுள்ளது.
பாஜகவின் அடுத்த எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர்களும் ஜோதிடர்களை நம்பி வருவதாகத் தெரிகிறது. இவர்களில் சிலர் பாஜகவினரின் சிபாரிசு பேரில் பிரபல ஜோதிடர்களிடம் நேரம் கேட்டு சந்திக்கும் வேடிக்கைகளும் நடைபெறுகிறது.
இவ்வாறு ஜோதிடர்களை சந்திப்பவர்கள் பட்டியலில் அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சியினரும் பின்வாங்கவில்லை. இவர்களிலும் பலர் ஜோதிடர்களை அணுகி தமக்கான போட்டியிடும் வாய்ப்பை கேட்டு மகிழ்கின்றனர்.
இவர்களுடன் ஆம் ஆத்மி கட்சியின் எம் எல் ஏக்களும் ஜோதிடர்களை அனுகும் நிலையும் உள்ளது. ஏனெனில், இவர்களில் பலருக்கு ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீண்டும் வாய்ப்பு அளிக்க மாட்டார் என்ற அச்சம் உருவாகி உள்ளது.
தற்போது முதன்முறையாக தனது முழு ஆட்சிக்காலத்தையும் முடிக்க இருக்கும் ஆம் ஆத்மியின் அரசு பிப்ரவரி 22 ஆம் தேதி காலாவதியாக உள்ளது. எனினும், டெல்லியில் அதிகம் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் தேர்வு பிப்ரவரி 15 -இல் முடிவடைகிறது.
இதன் காரணமாக, மத்திய தேர்தல் ஆணையம் அதன் பிறகே டெல்லியில் வாக்குப்பதிவு தேதி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மிகவும் குறைந்த காலஅவகாசமே அரசியல் கட்சிகளிடம் தமது வேட்பாளர்கள் தேர்விற்கு உள்ளது.
எனவே, அனைத்து கட்சிகளும் அடுத்த சுமார் 10 தினங்களில் வேட்பாளர்களை அறிவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த சூழலில், போட்டிக்கு முயல்பவர்கள் தம் மூடநம்பிக்கைகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து அவர்களது குடும்பத்தாரின் வற்புறுத்தலுக்காகவும் ஜோதிடர்களை சந்திக்க தயங்கவில்லை.
டெல்லியின் ஜோதிடர்களும் தங்கள் பலனை பெறத் தவறவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் அதற்கும் அதிக எண்ணிக்கையிலான ஒரே கட்சியினருக்கு ஜோதிடர்கள் எப்படி உறுதி அளிக்க முடியும் என்ற கேள்வியும் நிலவுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT