Published : 03 Jan 2020 04:29 PM
Last Updated : 03 Jan 2020 04:29 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்த முடிவில் இருந்து ஒரு இஞ்ச் கூட மத்திய அரசு பின்வாங்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக இருந்தது. அதேசமயம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேரணி நடத்தவும் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் அமித் ஷா பேசியதாவது:
''அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகத் திரண்டாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியே தீரும். இந்த நடவடிக்கையில் இருந்து பாஜக ஒரு இஞ்ச் கூட பின்வாங்காது. எதிர்க்கட்சிகளான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை இந்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன. இக்கட்சிகள் தவறான, பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன.
ராகுல் காந்தி தயவு செய்து இந்தச் சட்டத்தைப் படித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், என்னுடன் வாதிட வாருங்கள். உங்களால் முடியாவிட்டால், உங்களுக்காகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நான் இத்தாலியில் மொழிபெயர்த்துத் தருகிறேன். நீங்கள் படித்துக் கொள்ளலாம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைத் தெருக்களிலும், சாலைகளிலும் போராட்டம் நடத்தத் தூண்டுகிறது. நீங்கள் எவ்வளவு பொய்களைப் பரப்பினாலும், நாங்கள் கடினமாக உழைப்போம். சிறுபான்மையினருக்கும், இளைஞர்களிடமும் இச்சட்டத்தைக் கொண்டு சேர்ப்போம்.
வாக்கு வங்கிக்காக மிகப்பெரிய ஆளுமை கொண்ட வீர சாவர்க்கரைப் பற்றி காங்கிரஸ் கட்சி பேசுகிறது. காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாள்தோறும் போராடுவதற்குப் பதிலாகக் கோட்டா நகரில் குழந்தைகள் இறப்பை எவ்வாறு தடுப்பது குறித்து காங்கிரஸ் கட்சி சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் சிறுபான்மையினர் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் அண்டை நாடுகளில் குறைந்து வருகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், எந்தக் குடிமக்களின் குடியுரிமையும் பறிக்கப்படாது. இந்தச் சட்டம் குடியுரிமையை வழங்கும். இந்தச் சட்டத்தைப் பற்றி இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை''.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT