Published : 03 Jan 2020 02:32 PM
Last Updated : 03 Jan 2020 02:32 PM
பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று கடந்த 2016-ம் ஆண்டு இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை உண்மையில் நடத்தியதா? அவ்வாறு நடத்தியும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தரப்பில் எந்த மாற்றமும் இல்லையே என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் சாவந்த் சந்தீப் ரகுநாத் ஜம்மு காஷ்மீர் எல்லையில் காவலில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் ஊடுருவலில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், மத்திய அரசை நேரடியாகக் குறிப்பிடாமல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது
''2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று துல்லியத் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை ஒழித்ததாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராணுவ வீரர் சாவந்த், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க முயன்றபோது துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.
இந்தப் புத்தாண்டு காஷ்மீருக்குச் சிறப்பான, சாதகமான தொடக்கமாக அமையவில்லை. மூன்று ராணுவ வீரர்கள் தீவிரவாத தாக்குதலுக்குப் பலியாகியுள்ளார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 8 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களின் மறைவுக்கு மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாதி அரசு இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.
ஆனால், துல்லியத் தாக்குதலுக்குப் பின்பும், 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்பும் காஷ்மீரில் நிலைமை முன்னேறியுள்ளதாக மத்திய அரசு கூறி வருவது கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள், வீரர்கள் மட்டுமே கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல் மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு தேசிய மரியாதையுடன் சொந்த ஊர்களுக்கு வருகிறது.
காஷ்மீர் எல்லையில் இன்னும் ரத்தக்களறி இருந்து வருவது, உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலால் தீவிரவாதிகள் அடங்கிவிட்டார்கள் என்ற தோற்றம் மாயையாக இருக்கிற, உண்மையில் அதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டதா எனும் கேள்வி எழுகிறது. ஏனென்றால், தீவிரவாதத் தாக்குதல்கள் இப்போது அதிகரித்துள்ளன.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு, துல்லியத் தாக்குதலால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொட்டம் அடங்கிவிட்டதாகப் பெருமை பேசி வருகிறது. ஆனால் உண்மையில் தீவிரவாதிகள் கொட்டம் அடக்கப்பட்டதா? ஆனால், நிலைமையைப் பார்த்தால் காஷ்மீர் எல்லையில் நாள்தோறும் எல்லை மீறல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அதிகாரம் அளித்த 370-வது பிரிவை ரத்து செய்தது சிறப்பான நடவடிக்கை. துல்லியத் தாக்குதலுக்கு முன்பே இதைச் செய்திருந்தால், நிலைமை ஓரளவுக்கு முன்னேறியிருக்கக் கூடும். ஆனால், தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து வருகிறது''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT