Last Updated : 03 Jan, 2020 01:21 PM

7  

Published : 03 Jan 2020 01:21 PM
Last Updated : 03 Jan 2020 01:21 PM

ஜம்மு காஷ்மீரின் 3 முன்னாள் முதல்வர்கள் தேசவிரோதிகள் என்று யாரும் கூறவில்லை: அமித் ஷா விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீரின் 3 முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா ஆகியோர் தேசவிரோதிகள் என்று யாரும் கூறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கியது.

இந்தப் பிரிவை நீக்குவதற்கு முன்பாக மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, அவரின் தந்தையும், எம்.பியுமான பரூக் அப்துல்லா ஆகியோரை மாநில நிர்வாகம் வீட்டுக் காவலில் வைத்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புவதால், அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகிய மூவர் மட்டும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா காஷ்மீரின் கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள குப்கார் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அது தற்போது கிளைச்சிறையாகவே மாற்றப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி : கோப்புப்படம்

அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா ஹரி நிவாஸ் இல்லத்திலும், பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி செஸ்மாஷாகி இல்லத்திலும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் இன்று நடந்த ஒரு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா ஆகிய மூவரும் மக்களைத் தூண்டிவிடும் வகையில், ஆத்திரமூட்டும் வகையிலும் கருத்துக்களைப் பேசியதால் அவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் ஏன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காட்டிலும் என்ன பேசினார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவைத் தொட்டால், ஒட்டுமொத்த தேசமே பற்றி எரியும் என்று மூவரும் பேசினார்கள்.

இந்தக் கருத்துகளைக் கேட்டபின்தான், அவர்கள் மூவரையும், சில காலத்துக்கு வீட்டுக் காவலில் வைக்க நிர்வாகரீதியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் 3 பேரையும் தேசவிரோதிகள் என்று பாஜக குற்றம் சாட்டுகிறது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. நானோ அல்லது அரசின் சார்பில் யார் ஒருவரோ இந்த முன்னாள் முதல்வர்கள் மூவரும் தேசவிரோதிகள் என்று ஒருபோதும் பேசியதில்லை.

இவர்கள் மூவரையும் விடுவிப்பது குறித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் முடிவு செய்யும், என்னிடம் ஏதும் இல்லை. எப்போது அவர்கள் 3 பேரையும் விடுவித்தால் இயல்பு நிலைக்குப் பாதகமில்லாமல் இருக்குமோ அப்போது முடிவை எடுப்பார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு எந்தவிதமான வன்முறைகளும் இல்லாமல் இருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் அமைதியாகச் செல்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நாளில்கூட எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை''.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x