Published : 03 Jan 2020 11:44 AM
Last Updated : 03 Jan 2020 11:44 AM
காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, 2022 ஆம் ஆண்டு வரும் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலைக் குறி வைத்துள்ளார். இதற்காக அம்மாநிலத்தில் அதிக நாட்கள் தங்கி கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
பாஜக ஆளும் உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் நிலை பல வருடங்களாக மிகவும் மோசமாகி வருகிறது. இதை சீர்செய்ய காந்தி குடும்பத்தின் வாரிசான பிரியங்கா காந்தி முழுநேர அரசியலில் இறங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து வந்தது.
இதை ஏற்று கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திடீர் என தீவிர அரசியலில் இறங்கிய பிரியங்கா காங்கிரஸின் உ.பி. பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். பிரியங்கா வருகைக்கு பின் மேலும் மோசமாகும் வகையில் அவரது சகோதரரும் கட்சித் தலைவருமாக இருந்த ராகுல் காந்தி அமேதியில் தோற்றார்.
இவரை இரண்டாவது முறையாக பாஜக சார்பில் எதிர்த்துப் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வென்றார். இதை எதிர்பார்த்ததாலோ, என்னவோ ராகுல் இரண்டாவது தொகுதியாக போட்டியிட்ட வயநாட்டின் எம்.பி.யானார்.
இந்நிலையில், உ.பி.யில் வரும் 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, பிரியங்கா முன்கூட்டியே ஆயத்தமாக முடிவு செய்துள்ளார்.
இதில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தயார் எனவும் அறிவித்த பிரியங்காவிற்கு வரும் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும். ஏனெனில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்காவால் மக்களவைத் தேர்தலில் எந்தப் பலனும் இல்லை.
அதேபோல், உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த நிலை தொடர்ந்தால் பிரியங்காவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே, உ.பி.யின் லக்னோவில் ஒரு மாதத்துக்கு 10 முதல் 15 நாட்கள் வரை பிரியங்கா தங்கி கட்சிப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
இதன் சிறப்பு முக்கியத்துவமாக பாஜகவின் மதவாத அரசியலை முறியடிக்கும் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக, கடந்த வாரம் குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டத்தில் பிஜ்னோர் பலியான இரண்டு முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க நேரில் சென்றார் பிரியங்கா.
ஆனால், அங்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் அதே போராட்டத்தில் காயம் அடைந்த இந்து இளைஞரின் வீட்டில் சென்று பேட்டி அளித்திருந்தார். இதேபோல், ராகுலைக் கைவிட்ட அமேதியில் அடிமட்டத் தொண்டர்களைச் சந்தித்து அங்கு மீண்டும் காங்கிரஸால் கைப்பற்றவும் முடிவு செய்துள்ளார்.
தாம் மாநில அளவில் நடத்திய காங்கிரஸ் கூட்டத்திலும் பிரியங்கா, கட்சிக்காக தீவிரமாகப் பணியாற்றுபவர்களுக்கே பதவி என தீர்க்கமாகக் கூறியுள்ளார். உ.பி.யின் ஆளும் கட்சிகளாக இருந்த அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளால் பிரியும் வாக்குகள் பாஜகவுக்குச் செல்வதைத் தடுப்பதும் பிரியங்காவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
கடைசியாக உ.பி.யில் நடைபெற்ற 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸுக்கு ஒரு இலக்கத்தில் மட்டும் எம்எல்ஏக்கள் கிடைத்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT