Published : 02 Jan 2020 02:08 PM
Last Updated : 02 Jan 2020 02:08 PM
மாதத்துக்கு ரூ.153 கட்டணத்தில் 200-க்கும் மேற்பட்ட இலவச சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு ஒளிபரப்புவது கட்டாயம் என்று கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தனது திருத்தப்பட்ட புதிய விதிமுறையில் தெரிவித்துள்ளது.
தற்போது கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், வரிகள் உள்ளிட்ட 153 ரூபாய்க்கு 100 இலவச சேனல்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றனர். இந்த உத்தரவுக்குப் பின் இனிமேல் 200 இலவச சேனல்களை வழங்க வேண்டும். இந்த உத்தரவு மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
டிராய் அமைப்பின் இந்த உத்தரவால், சன் டிவி நெட்வொர்க்கின் பங்குகள் பங்குச்சந்தையில் 6.37 சதவீதம் அளவுக்குச் சரிந்தன, டென் நெட்வொர்க்கின் பங்குகள் 3.90 சதவீதமும், ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் 2.99 சதவீதமும் சரிந்தன. டிஷ் டிவி பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிந்த நிலையில், மீண்டும் எழுந்தது.
அதிகபட்சமாக வாடிக்கையாளர்கள் இலவச சேனல்களுக்கு ரூ.160 செலுத்தினால் போதுமானது என்று டிராய் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் குறைந்த மாதக் கட்டணத்தில் அதிகமான சேனல்களைப் பார்க்க முடியும்.
டிராய் அமைப்பு தனது உத்தரவில் கூறுகையில், "அனைத்துப் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாக்கவும், குறிப்பாக வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு வீட்டில் பல தொலைக்காட்சி இணைப்புகள் ஒரு நபரின் பெயரில் இருந்தால், அறிவிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் எத்தனை இலவச சேனல்கள் வழங்குகிறோம் என்பதை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இனிமேல் எத்தனை சேனல்கள் இலவசமாக ஒளிபரப்பாகிறது என்பதைத் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT