Published : 02 Jan 2020 12:00 PM
Last Updated : 02 Jan 2020 12:00 PM
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 100 குழந்தைகள் இறந்தது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு செல்லாமல் இருப்பது ஏன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரியங்கா காந்தி ஏன் குறைகளைக் கேட்கவில்லை என்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 100 குழந்தைகள் உடல்நலக் குறைவால் அடுத்தடுத்து சில நாட்களில் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை, இறந்த குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.
ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஏக்நாத், ரவிசங்கர் தம்பதி போராட்டம் நடத்தி கைதானார்கள். அவர்களின் 14 மாதக் குழந்தை தாய்ப்பாலுக்காக அழுதது. இதுகுறித்து பிரியங்கா காந்தி அறிக்கை வெளியிட்டு, அந்தக் குழந்தையை, பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டதாக யோகி ஆதித்யநாத் அரசைச் சாடினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் இந்தச் செயல்கள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் கூறுகையில், "ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தன. அதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது வேதனையளிக்கிறது.
ஆனால், இதே சம்பவம் உத்தரப் பிரேதசத்தில் நடந்திருந்தால் அவருக்கு நன்றாக இருந்திருக்கும். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசின் அக்கறையின்மையால் இறந்த அந்தக் குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும்.
கோட்டா மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவிக்காவிட்டால், உத்தரப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பிரியங்கா சந்தித்துப் பேசியது அரசியல் சந்தர்ப்பவாதமாகவே கருதப்படும். ஆதலால், உத்தரப் பிரதேச மக்கள் எப்போதும் விழிப்புடனே இருங்கள்.
கோட்டாவில் அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் உயிரிழந்தது என்பது முதல்வர் அசோக் கெலாட் அரசின் மோசமான நிர்வாகமின்மைதான் காரணம். இந்தச் சூழல் குறித்து இன்னும் பொறுப்பற்ற தன்மையுடனும், இரக்கமின்றியும் அரசு இருக்கிறது" என மாயாவதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT