Published : 01 Jan 2020 04:22 PM
Last Updated : 01 Jan 2020 04:22 PM
மக்களுக்குப் புத்தாண்டு பரிசாகச் சமையல் கேஸ் விலையையும், ரயில் பயணிகள் கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரயில்வே துறை கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாகப் பயணிகள் டிக்கெட் கட்டணத்தை நேற்று உயர்த்தி அறிவித்தது. இதில் புறநகர் பயணிகள் ரயில்களுக்குக் கட்டணம் உயர்த்தவில்லை. அதேசமயம், சாதாரண இருக்கை முதல் ஏசி வகுப்பு வரை குறைந்தபட்சம் கிலோமீட்டருக்கு ஒரு பைசா முதல் 4 பைசா வரை உயர்த்தியுள்ளது
அதேபோல மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 19 ரூபாய் இன்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதற்கு மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், " புத்தாண்டு தினத்தன்று மோடி அரசு மக்களுக்குப் புத்தாண்டு பரிசாகச் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 19 ரூபாய் உயர்த்தியுள்ளது, வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலையை 29 ரூபாய் உயர்த்தியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் சிலிண்டர்விலை 137 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு பெரும் பிரச்சினை, ஆனால், இதை பாஜக தனது அகங்காரத்தால் கண்டுகொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் கூறுகையில், " ரயில் கட்டண உயர்வு, சிலிண்டர் விலை அதிகரிப்பு போன்றவற்றோடு மத்திய அரசு புத்தாண்டைத் தொடங்கியுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மற்றொரு தாக்குதல். வேலையின்மை, உணவு விலை பணவீக்கம், கிராமப்புற மக்களின் ஊதியம் குறைவு போன்றவற்றால் இந்த உயர்வு வந்துள்ளது. பிரதமர் மோடி அரசு மக்களுக்கு அளிக்கும் புத்தாண்டு பரிசு" எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT