Published : 01 Jan 2020 11:25 AM
Last Updated : 01 Jan 2020 11:25 AM
2020, ஜனவரி 1-ம் தேதி, புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்த நிலையில் அதில் 17 சதவீதக் குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இதில் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிஜி தீவில் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. கடைசியாக அமெரிக்காவில் குழந்தை பிறந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன.
இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 67 ஆயிரத்து 285 குழந்தைகளும், அதைத் தொடர்ந்து சீனாவில் 46 ஆயிரத்து 299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26 ஆயிரத்து 39 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16 ஆயிரத்து 787 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 20 குழந்தைகளும் பிறந்துள்ளன.
அமெரிக்காவில் 10 ஆயிரத்து 452 குழந்தைகளும், காங்கோவில் 10 ஆயிரத்து 247 குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 8 ஆயிரத்து 493 குழந்தைகளும் பிறந்துள்ளன.
உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறது. உலகப் புகழ் பெற்ற டாக்டர் சத்யேந்திர நாத் போஸ், பாலிவுட் நட்சத்திரம் வித்யா பாலன் ஆகியோரும் புத்தாண்டு தினத்தன்று பிறந்தவர்கள்தான்.
கடந்த 2018-ம் ஆண்டில் 25 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே இறந்துவிட்டனர். பெரும்பாலான குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்ததனாலும், சிக்கலான பிரசவம், தொற்று நோய்கள் ஆகியவை காரணமாகவும் உயிரிழந்துள்ளன. அதேசமயம், ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் இறக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத்தில் ஏற்பட்ட சிறப்பான முன்னேற்றம் காரணமாக, பிறந்து முதல் மாதத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 47 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா போர் கூறுகையில், " புத்தாண்டு, புதிய 10 ஆண்டுகளின் தொடக்கம். எதிர்காலத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள், அபிலாசைகள் மட்டுமல்லாது, நமக்குப் பின் வரக்கூடியவர்களைப் பற்றியும்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT