Published : 31 Dec 2019 09:07 PM
Last Updated : 31 Dec 2019 09:07 PM
ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கரை மாதங்களுக்குப் பின், இன்று நள்ளிரவு முதல் அனைத்து மொபைல் போன்களுக்கும் எஸ்எம்எஸ் வசதியும், அரசு மருத்துவமனைகளில் மட்டும் பிராட்பேண்ட் இணைய வசதியும் வழங்கப்படும் என்று யூனியன் பிரதேச நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் வசதி, இணைய வசதி, லேண்ட்லைன் வசதி இணைப்பும் ரத்து செய்யப்பட்டது.
அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த முறை கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்பின் படிப்படியாக பல்வேறு வசதிகளை படிப்படியாக ஜம்மு நிர்வாகம் அளித்து வந்தது. லேண்ட் லைன் போன் வசதியும், மொபைல் போஸ்ட் பெய்ட் வசதியும் படிப்படியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், புத்தாண்டு முதல் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் வசதியும், அரசு மருத்துவமனைகளில் மட்டும் இணைய வசதியும் வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் நிருபர்களிடம் இன்று கூறுகையில், " அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று நள்ளிரவு முதல் (டிச.31) இணையதள இணைப்பு வழங்கப்படும். மொபைல் போன்களுக்கு எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படும். அதேசமயம், ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இணைய வசதி வழங்குவதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT