Last Updated : 31 Dec, 2019 12:42 PM

 

Published : 31 Dec 2019 12:42 PM
Last Updated : 31 Dec 2019 12:42 PM

பாக்.,சீன எல்லையில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்: பிபின் ராவத் நம்பிக்கை

டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ராணுவத் தளபதி பிபின் ராவத் : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

பாகிஸ்தான், சீன எல்லையில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழு அளவில், சிறப்பாகத் தயாராக இருக்கிறது என்று புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.

நம் நாட்டில் இப்போது ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தனித்தனியாகத் தளபதிகள் உள்ளனர். ஆனால், போர் போன்ற முக்கிய காலகட்டங்களில் முப்படைகளை ஒருங்கிணைப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. இது கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின்போது ஏற்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்த குழு வளர்ந்த நாடுகளில் இருப்பது போல முப்படைக்கும் தலைமைத் தளபதி பதவியை உருவாக்க வேண்டும் என பரிந்துரை வழங்கியது.

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கடந்த 24-ம் தேதி கூடியபோது, அதில் புதிதாக முப்படை தளபதி பதவியை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, முப்படை தலைமைத் தளபதியாக ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று நியமிக்கப் பட்டார்.

இதன் மூலம் நாட்டின் முதல் தலைமைத் தளபதி என்ற பெருமையையும் பிபின் ராவத் பெற்றார். ராணுவத் தளபதி பொறுப்பில் இருந்து இன்று ஓய்வுபெறும் பிபின் ராவத், நாளை தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

இதனிடையே இன்று டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவத் தளபதி பிபின் ராவத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

''என்னுடைய இந்த 3 ஆண்டு காலத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ராணுவ வீரர்கள், அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் 13 லட்சம் படையினர் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக தரைப்படைத் தளபதியாகப் பொறுப்பேற்கும் லெப்டினன்ட் ஜெனரல் எம்எம் நரவானே தலைமையில் ராணுவம் இன்னும் புதிய உயரத்துக்குச் செல்லும்.

சீனா - பாகிஸ்தான் எல்லையில் எத்தகைய சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது. நான் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் ராணுவத்தை மறுசீரமைப்பு செய்வது, நவீன ஆயுதங்களை ராணுவத்துக்குள் புகுத்துவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

என்னுடைய இந்த 3 ஆண்டு காலத்தில் அமெரிக்காவின் அதிநவீன எம்777 அல்ட்ரா லைட் ஹவிட்ஜர்ஸ், கே-9 வஜ்ரா, சிக் சூயர் அசால்ட் ரைபிள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த 3 ஆண்டு காலத்தில் சவாலான நேரத்தில் எனக்குத் துணையாகவும், நாட்டுக்காகவும் உழைத்து, கடமையைச் செய்து, ராணுவத்தின் பாரம்பரியத்தைக் காத்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக வடக்கு, கிழக்கு எல்லையில் பணிபுரியும் வீரர்கள், துணிச்சலாக பனிக்காலத்தைத் தாங்கிக் கொண்டு பனிக்காற்றில் நாட்டைப் பாதுகாக்கிறார்கள்.

அடுத்ததாக ராணுவத் தளபதியாக பொறுப்பேற்க இருக்கும் லெப்டினன்ட் கர்னல் மனோஜ் முகுந்த் நரவானேவுக்கு எனது வாழ்த்துகள். மிகச்சிறந்த திறமையான அதிகாரி நரவானே''.

இவ்வாறு பிபின் ராவத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x