Last Updated : 30 Dec, 2019 06:59 PM

 

Published : 30 Dec 2019 06:59 PM
Last Updated : 30 Dec 2019 06:59 PM

மகரவிளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கோப்புப்படம்

சபரிமலை

சபரிமலையில் மண்டலப் பூஜை முடிந்து, மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது.

41 நாட்கள் மண்டலப் பூஜை காலம் முடிந்து, கடந்த 27-ம் தேதி நடை சாத்தப்பட்டு, பின்னர் இன்று பூஜைகளுடன் மீண்டும் நடை திறக்கப்பட்டது. சபரிமலை நடை திறப்பைக் காணவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் மண்டலப் பூஜைக்காகக் கடந்த நவம்பர் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தீபாராதனை காட்டி, பூஜைகள் செய்து முறைப்படி மூலவர் இருக்கும் கதவைத் திறந்தார். மேல்சாந்தியாக ஏ.கே.சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தியாக எம்.எஸ். பரமேஸ்வரன் நம்பூதரியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடந்த 41 நாட்களாக சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், மண்டலப் பூஜை காலம் முடிந்து கடந்த 27-ம் தேதி நடை சாத்தப்பட்டது.

3 நாட்களுக்குப் பின் மகரவிளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை நடை மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் ஏ.கே.சுதீர் நம்பூதரி மாலை பூஜைகள் செய்து மூலவர் கதவைத் திறந்தார்.

தலைமை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு உடன் இருந்தார். கோயில் நடை திறக்கப்படும் முன்பே நீண்டவரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். நடை திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் பூஜை முடிந்த பின், சரணகோஷத்துடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மகரவிளக்கு பூஜை ஜனவரி 15-ம் தேதி நடக்கிறது, மகரவிளக்கு பூஜை முடிந்ததும் ஜனவரி 21-ம் தேதி கோயில் நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காகக் கூடுதலாக இன்று 1,397 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, 1,875 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x