Published : 30 Dec 2019 06:24 PM
Last Updated : 30 Dec 2019 06:24 PM
தேசத்தில் வன்முறைக்கும், பழிக்குப் பழிவாங்குதலுக்கும் இடமில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் செயலுக்குக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர், ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களே அதற்கான தொகை அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்று முதல்வர் ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே லக்னோவில் 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று புறப்படும் முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவி நிறம் என்பது இந்துமதத்தைக் குறிக்கிறது. அது வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் துணை போகக்கூடாது. தேசத்தில் பழிவாங்கலுக்கும், வன்முறைக்கும் இடமில்லை.
என்னுடைய பாதுகாப்பு என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல. அதுகுறித்து நான் பொதுவெளியில் ஆலோசிக்கவில்லை. ஆனால், பாதுகாப்பு என்பது மாநிலத்தில் உள்ள சாமானிய மக்களுக்குரிய பிரச்சினையாகும்.
மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று அறியமுடியாமல் மக்கள் கவலைப்படுகிறார்கள். இதுபோன்று மாநில அரசு செய்வது அராஜகம். யாருக்கும் வேலையில்லை, வேலையின்மை நிலவுகிறது. பெண்கள் பாதுகாப்பற்ற சூழலாக உணர்கிறார்கள். இன்னும் இதைக்காட்டிலும் பெரிய பிரச்சினைகள் இருக்கும் போது அற்பமான விஷயத்தை அரசு எழுப்புகிறது
போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது சட்டத்துக்கு விரோதமாக எடுக்கும் போலீஸாரின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, சீல் வைப்பது ஆகியவை நிறுத்தப்படவேண்டும். அப்பாவி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது
போராட்டத்தில் கொல்லப்பட்ட அனாஸ், சுலைமான் ஆகிய இரு இளைஞர்களும் 20 வயதுக்குட்பட்டவர்கள். ஒருவர் காபி விற்பனையாளர், மற்றொருவர் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தவர். வீ்ட்டை விட்டு வெளியே சென்ற இருவர் குறித்தும் அவர்களின் பெற்றோருக்கு இறப்புச் செய்திதான் வந்தது. அவர்கள் எந்த போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால், போலீஸார் அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி, அவர்களின் உடலை அடக்கம் செய்யவிடாமல் மிரட்டியது.
வாரணாசியில் ஏராளமான மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதில் இளம் தம்பதி ரவி சங்கர், ஏக்தா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் 14 மாத குழந்தை தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கிறது, தாய்க்காக காத்திருக்கிறது.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT