Published : 30 Dec 2019 05:10 PM
Last Updated : 30 Dec 2019 05:10 PM
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டபின், முதல்முறையாக 33 பணியிடங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 33 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், தட்டச்சு பணியாளர், ஓட்டுநர், எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட 33 பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் சஞ்சய் தார் இந்த விளம்பரத்தைக் கடந்த 26-ம் தேதி அளித்துள்ளார், 2020 ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கலாம்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்படாத வரை அங்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் அரசுப்பணியில் சேரமுடியாது, நிலம் வாங்க முடியாது, வீடு வாங்க முடியாது, அங்குள்ள பெண்களைத் திருமணம் செய்ய முடியாது என்ற நிலை இருந்தது.
ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 370 பிரிவை ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதுகடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீருக்கு அனைத்து மக்களும் வேலையில் சேரலாம் என்ற நிலை வந்தநிலையில் முதல் முறையாக உயர் நீதிமன்றத்தின் 33 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இந்த 33 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் யாரும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கத் தேவையில்லை. தேசத்தில் உள்ள எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதன்படி, இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 2019, ஜனவரி 1-ம் தேதியன்று 19வயதுக்குக் குறைவில்லாதவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். எஸ்சி,எஸ்டி,ஓஎஸ்சி ஆகிய பிரிவினர் 43 வயதாகவும், மாற்றுத்திறனாளிகள் 42 வயதாகவும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 48 வயதுவரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT