Published : 29 Dec 2019 06:34 PM
Last Updated : 29 Dec 2019 06:34 PM
என்ன நடந்தாலும் சரி, என்.பி.ஆர் படிவத்தை நான் நிரப்ப மாட்டேன் என்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் இன்று சமாஜ்வாடி கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது ''தேவை ஏற்பட்டால் எந்தவொரு படிவத்தையும் நிரப்பாத முதல் நபராக நான் இருப்பேன். நீங்கள் என்னை ஆதரிப்பீர்களா? மாட்டீர்களா? நாம் படிவத்தை நிரப்பவில்லை என்றால், நாம் வெளியேற்றப்படுவோம். என்ன நடந்தாலும் சரி, நான் படிவத்தை நிரப்பப் போவதில்லை, நீங்கள் படிவத்தை நிரப்புவீர்களா? மாட்டீர்களா? சொல்லுங்கள்”என்று இளம் சமாஜ்வாடிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைப் பார்த்து அவர் கேட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் மேலும் பேசியதாவது:
''தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) எதுவாக இருந்தாலும் அவை நாட்டின் ஏழை மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரானவை.
அரசியலமைப்பை மீறுபவர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற அனைத்து இந்தியர்களும் முன்வர வேண்டும். பொருளாதாரத்தின் மோசமான நிலை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் எந்த கேள்வியும் எழுப்பக் கூடாது என்பதற்காகத்தான் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி போன்றவை நிறைவேற்றப்படுகின்றன.
கேள்வி என்னவென்றால், நமக்கு வேலைவாய்ப்புகள் வேண்டுமா அல்லது என்.ஆர்.சி வேண்டுமா என்பதுதான்?
மக்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தும் காவல்துறையினரிடம், அவர்களின் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் சான்றிதழ்களும் கோரப்படும் என்பதை அவர்களுக்கு கூற விரும்புகிறேன்.
பணமதிப்புநீக்க நடவடிக்கையின்போது, ஊழல் முடிவுக்கு வரும் என்று அரசாங்கம் கூறியது, ஆனால் அது பொய்யானது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, பல வங்கிகள் மூடப்பட்டன, அதே நேரத்தில் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) நமது உள்ளூர் வணிகங்களை நாசமாக்கியது.
தற்போது நாட்டின் பொருளாதாரம் ஐ.சி.யுவிலிருந்து வெளியேறி ஐ.சி.சி.யுவிற்குச் சென்றுவிட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி ஆட்சியில் இருந்த காலங்களில், இளைஞர்களுக்கு மடிக்கணினிகள் கிடைத்தன, ஆனால் பாஜக அவர்களை கழிப்பறைகளை நோக்கி அழைத்துச் செல்கிறது. வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள், ''
இவ்வாறு உ.பியின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT