Last Updated : 29 Dec, 2019 04:38 PM

 

Published : 29 Dec 2019 04:38 PM
Last Updated : 29 Dec 2019 04:38 PM

'கேலோ இந்தியா', 'டி20 போட்டி' அசாமில் நடக்குமா? பிரதமர் மோடி வருகைக்கு எதிராகப் போராட்டம்: ஏஏஎஸ் எச்சரிக்கை

பிரதமர் மோடி : கோப்புப்படம்

கவுகாத்தி

2020, ஜனவரி 10-ம் தேதி அசாமில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி வந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு(ஏஏஎஸ்யு) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு உருவாகி போராட்டம் நடந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து அசாம் மாநிலத்தில் இருந்து ஏராளமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அசாம் மாநிலத்தில் என்ஆர்சி நடத்தப்பட்டு 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் உள்ளே கொண்டுவரும் நோக்கில் குடியுரிமைத்திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அசாம் மக்கள் கருதி போராட்டம் நடத்துகின்றனர்.

இந்நிலையில் 2020, ஜனவரி 5-ம் தேதி கவுகாத்தியில் இந்தியா,இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி 10-ம் தேதி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இது முக்கிய விளையாட்டு போட்டிகளையும் நடக்கவிடாமல் போராட்டம் நடத்த அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு(ஏஏஎஸ்யு) தலைவர் திபன்கா குமார் நாத் இன்று கவுகாத்தியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேறிய பின் பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் ஜனவரி மாதம் வர உள்ளார். ஜனவரி 10-ம் தேதி கவுகாத்தியில் நடக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கிவைக்க வந்தால், நாங்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

பிரதமர் மோடி வருகை குறித்த உறுதியானபின் எங்கள் போராட்டம் குறித்த திட்டங்களை அடுத்தகட்டமாக அறிவிப்போம். அதேபோல ஜனவரி 5-ம்தேதி இந்தியா, இலங்கை டி20 போட்டிகளும் நடக்க இருக்கின்றன. இந்த இரு நிகழ்ச்சிகளையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

பிரதமர் மோடியும், பாஜகவும் அசாம் மாநிலத்தை அழிக்கத் திட்டமிட்டுள்ளார்கள், நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும். உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம், எங்களுக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை இருக்கிறது. அதேபோல ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தொடரும் " எனத் தெரிவித்தார்

ஏஏஎஸ்யு அமைப்பின் தலைமை ஆலோசகர் சம்முஜ்ஜால் குமார் பட்டாச்சார்யா கூறுகையில், " எங்கள் போராட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு செய்யும் அனைத்து பணிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம். கவுகாத்தியில் இந்தியா, இலங்கை டி20 போட்டியும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியும் நடக்கிறது. இதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், நேரம் வரும்போது எங்கள் நடவடிக்கையைக் குறிப்பிடுகிறோம்" எனத் தெரிவித்தார்

ஏஏஎஸ்யு பொதுச்செயலாளர் லுரின்ஜோதி கோகோய் கூறுகையில், " குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் அசாம் மாநிலத்தில் 5.42 லட்சம் மக்கள் பலன் பெறுகின்றனர். 19 லட்சம் பேருக்குக் குடியுரிமை இல்லை என்று கடந்த ஆகஸ்ட் மாதம் என்ஆர்சி மூலம் தெரியவந்தது. ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம் அந்த 19லட்சத்தில் 5.42 லட்சம் மக்கள் பலன் பெறுகி்ன்றனர் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x