Published : 29 Dec 2019 03:48 PM
Last Updated : 29 Dec 2019 03:48 PM
குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு அளித்து மத்திய அமைச்சர் விழாவில் பங்கேற்ற பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவை அந்த கட்சியின் தலைவர் மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
அதேபோல, உ.பியில் போராட்டக்காரர்களைப் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று மீரட் எஸ்பி. பேசியதையும் மாயாவதி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டத்துக்கு எதிராகவே வாக்களித்தது.
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் பதேரியா தொகுதி எம்எல்ஏ ரமா பாய் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளார். போபால் நகரில் நேற்று குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக ரமா பாய் தொகுதியில் நிகழ்ச்சி நடந்தது.இதில் மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிஎஸ்பி எம்எல்ஏ ரமா பாயும் பங்கேற்று , மத்திய அமைச்சர் பிரகலாத் படேலைச் சந்தித்துப் பேசினார். இந்த விஷயம் மாயாவதிக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, எம்எல்ஏ ரமா பாயை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ மாயாவதி, தனது ட்விட்டர் பக்கத்தி்ல், கூறுகையில், " பகுஜன் சமாஜ் கட்சி ஒழுக்கமான கட்சி. ஒழுக்கத்தை மீறி நடந்துகொண்ட எம்எல்ஏ ரமா பாய் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட எம்எல்ஏ ரமா பாய் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவர் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்
உ.பி. போலீஸாருக்கு கண்டனம்
இதற்கிடையே குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் கடந்த 20-ம் தேதி போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களைப் பார்த்து மீரட் போலீ்ஸ் எஸ்.பி. அகிலேஷ் நாராயன் சிங், போராட்டக்காரர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கோஷமிடுவதாக இருந்தால் இங்கு இருக்காதீர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. மீரட் எஸ்.பி. அகிலேஷ் பேசிய பேச்சுக்குக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் ட்விட்டரில் போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், " உத்தரப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் இந்தியர்கள்தான். அவர்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல. குடியுரிமை திருத்தச்சட்டம், என்ஆர்சிக்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்களைப் பார்த்து மீரட் எஸ்பி. வகுப்புவாத கருத்துக்களைப் பேசியுள்ளது துரதிர்ஷ்டம், வேதனைக்குள்ளானது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற விஷயத்தில் உயர்ந்த அளவிலான நீதி விசாரணை போலீஸார் மீது ஏற்படுத்த வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுதான் பிஎஸ்பி கட்சியின் கோரிக்கையாகும்" எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT