Published : 29 Dec 2019 03:24 PM
Last Updated : 29 Dec 2019 03:24 PM
உங்களால் பெருமைப்படுகிறேன், துயரத்தில் இருப்பவர்களைச் சந்தித்துப் பேசுவதில் எந்தவிதமான குற்றமும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை அவரின் கணவர் ராபர்ட் வதேரா பாராட்டியுள்ளார்.
அதேசமயம், லக்னோவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி குடும்பத்தினரை நேற்று சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை உ.பி. போலீஸார் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதை ராபர்ட் வதேரா கண்டித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்ஆர் தாராபூரி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார். லக்னோவில் தாராபூரியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சென்றார்.
ஆனால், லக்னோவில் உள்ள லோஹியா பாத் எனுமிடத்தில் பிரியங்கா காந்தி கார் வந்தபோது போலீஸார் மடக்கி அனுமதி மறுத்தனர். ஆனாலும் பிரியங்கா காந்தி தயங்காமல் காங்கிரஸ் செயலாளர் தீரஜ் குர்ஜாருடன் இருசக்கர வாகனத்தில் தாராபூரி இல்லத்துக்குச் சென்றார்.
இதனால் செய்வதறியாது திகைத்த லக்னோ போலீஸார், ஜீப்பில் பிரியங்கா காந்தியைப் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று பாலிடெக்னிஸ் சதுக்கம் எனுமிடத்தில் மடக்கிப் பிடித்த அங்குச் செல்ல அனுமதி மறுத்தனர்.
ஆனால், பிரியங்கா காந்த தனது தொண்டர்களுடன் 2.5 கிமீ தொலைவு நடந்தே சென்றார். அப்போது பிரியங்கா காந்தியைத் தடுக்க முயன்ற பெண் போலீஸார் அவரின் கழுத்தை பிடித்து தள்ளியும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், " உ.பி.போலீஸார் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள். என் கழுத்தைப் பிடித்து நெறித்து, தாக்கினார்கள்" எனத் தெரிவித்தார்
இதையடுத்து பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வத்ரா இன்று நிருபர்களிடம் கூறுகையில், " உ.பி. பெண் போலீஸார் பிரியங்கா காந்தியைப் பிடித்துத் தள்ளி, தாக்கியது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. ஒருவர் பிரியங்கா காந்தியின் கழுத்தைப்பிடித்துக்கொண்டு, மற்றொருவர் அவரை தள்ளினர், இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். ஆனால், தாராபூரியைச் சந்திக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் பிரியங்கா காந்தி அங்கு இருசக்கர வாகனத்திலும், நடந்தும் சென்றுள்ளார்.
நான் உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன் பிரியங்கா. உங்கள் உதவியும், இரக்கமும் யாருக்கு தேவையோ அவர்களை நீங்கள் தேடிச் சென்று சந்திப்பது பெருமையாக இருக்கிறது. நீங்கள் செய்தது சரிதான், துயரத்தில் இருப்பவர்களை, தேவையுள்ளவர்களைச் சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ராபர்ட் வதேரா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது போலீஸார் விரட்டியதையும், போலீஸார் அவரை கழுத்தைப் பிடித்துத் தள்ளி வீடியோவையும் பகிர்ந்துள்ளார். பிரியங்கா காந்தியின் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரைக் கண்டித்து உ.பி.யில் காங்கிரஸ் கட்சியினர் போலீஸாரின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், உத்தரப்பிரதேச போலீஸாரோ பிரியங்கா காந்தியைத் தாக்கவில்லை என்று மறுக்கின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT