Published : 28 Dec 2019 03:10 PM
Last Updated : 28 Dec 2019 03:10 PM
உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, நிகழ்ந்த வன்முறையில் சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்துக்கான காசோலையை முஸ்லிம்கள் வழங்கினர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். இதில் புலந்தசாஹர் மாவட்டத்தில் உள்ள உபர்கோட் பகுதியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏராளமான மக்கள் கடந்த 20-ம் தேதி போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் அரசு வாகனங்கள், ஜீப்கள், கார்கள், பேருந்துகள் ஆகியவற்றின் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர் தீவைத்தும் எரிக்கப்பட்டன.
இந்த வன்முறை தொடர்பாக புலந்த்சாஹர் போலீஸார் 22 அடையாளம் தெரிந்தவர்கள் மீதும், 800 அடையாளம் தெரியாதவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தார்கள்.
இந்நிலையில் புலந்த்சாஹர் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தங்களுக்குள் நிதி திரட்டி, சேதமடைந்த பொதுச்சொத்துக்களுக்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட அதிகாரிகளிடம் வழங்கினர். மேலும், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வருத்தமும், மன்னிப்பும் கோரினர். இது தொடர்பாக உ.பி. அரசும் வீடியோவும், அறிக்கையும் வெளியிட்டிருந்தது.
அந்த வீடியோவில் ஹாஜி அக்ரம் அலி என்பவர் கூறுகையில், " எங்கள் முஸ்லிம் சமூகத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நாங்கள் நிதி திரட்டியுள்ளோம். எங்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த பொதுச்சொத்துக்களுக்கு இழப்பீடாக ரூ.6.27 லட்சத்துக்கான காசோலையை அரசிடம் வழங்கினோம். போராட்டத்தில் போலீஸாரின் வாகனங்கள், வாக்கி டாக்கி ஆகியவற்றைச் சேதப்படுத்தியவர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தார்
புலந்தசாஹர் மாவட்ட ஆட்சியர் ரவிந்திர குமார் கூறுகையில்," புலந்த்சாஹரில் கடந்த 20-ம் தேதி நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதற்கு வருத்தம் தெரிவித்த முஸ்லிம் மக்கள் இழப்பீடாக ரூ6 லட்சத்து 27 ஆயிரம் தொகையை என்னிடமும், போலீஸ் எஸ்பி. சந்தோஷ் குமார் சிங்கிடம் வழங்கினர்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT