Published : 28 Dec 2019 09:21 AM
Last Updated : 28 Dec 2019 09:21 AM

இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய கர்நாடகா திட்டம்- அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு

பெங்களூரு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, குல்பர்கா, பெலகாவி உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மங்களூருவில் நடந்த போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கர்நாடகாவில் நடந்துவரும் போராட்டத்தின் பின்னணியில் பி.எஃப்.ஐ (Popular Front Of India), எஸ்.டி.பி.ஐ (Social Democratic Party of India) ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக தொடக்க மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று பெங்களூருவில் கூறியதாவது:

வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ ஆகிய இரு அமைப்புகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் இந்த இரு அமைப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இந்த இரு அமைப்புகளுக்கும் மக்கள் மத்தியில் எந்த செல்வாக்கும் இல்லை.

சமூகத்தில் வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம். அமைதியையும் ஒற்றுமையையும் அவர்கள் விரும்பவில்லை. கர்நாடகாவின் அமைதிக்கு குந்தகமாக இருக்கும் இரு அமைப்புகளுக்கும் தடை விதிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி கூறும்போது, ‘‘தேச விரோத செயலில் ஈடுபட்டுள்ள பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ ஆகிய இரு அமைப்புகளும் தற்போது காங்கிரஸுடன் கைக்கோத்துள்ளன. விரும்பத்தகாத செயல்களை செய்து கர்நாடக அரசுக்கு தொந்தரவு தர அந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. கர்நாடகாவின் அமைதியை கெடுக்க முடிவெடுத்துள்ளன. எனவே இந்த இரு அமைப்புகளுக்கும் விரைவில் தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல், அமைச்சர் அசோக் உட்பட ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் விரைவில் கர்நாடகாவில் பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகளும் தடை விதிக்கப்படும் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x