Last Updated : 27 Dec, 2019 08:11 PM

1  

Published : 27 Dec 2019 08:11 PM
Last Updated : 27 Dec 2019 08:11 PM

ஜேஜேபி கட்சி துணைத்தலைவர் ராஜினாமா: ஹரியாணாவில் துணை முதல்வர் துஷ்யந்திற்கு நெருக்கடி

புதுடெல்லி

ஹரியாணாவில் ஜனநாயக் ஜனதா கட்சி(ஜேஜேபி)யின் துணைத்தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால், ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்து துணை முதல்வரான அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹரியானாவில் கடந்த அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், அதிக தொகுதிகள் பெற்றாலும் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு சில எம்எல்ஏக்கள் தேவை ஏற்பட்டது.

இதற்காக, தனித்து போட்டியிட்ட எதிர்கட்சியான ஜேஜேபியின் பத்து எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஜேஜேபியின் துணைத்தலைவர் துஷ்யந்த் சவுதாலாவிற்கு மட்டும் துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட்டது.

இதில் துஷ்யந்த் வற்புறுத்தலின் பேரில் அவருக்கு நெருக்கமான எம்எல்ஏ அனுப் தனக்கிற்கு மட்டும் இணை அமைச்சர் பதவி கிடைத்தது. மற்ற எட்டு பேருக்கு வாரியங்களின் தலைவர் பதவி கூடக் கிடைக்காதமையால் அதிருப்தியுடன் இருந்தனர்.

இந்த அதிருப்தி வெடிக்கும் வகையில் நேற்று ஜேஜேபியின் மூத்த தலைவரான ராம்குமார் கவுதம், கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனால், துஷ்யந்திற்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஜேஜேபி நிர்வாகிகள் கூறும்போது, ‘தனது தாயான நைனா சவுதாலா எம்எல்ஏவிற்கும் இல்லாமல் அனுப் தனக்கை அமைச்சராக்கி ஏழு எம்எல்ஏக்கள் வாயை அடைத்திருந்தார் துஷ்யந்த்.

ஜேஜேபியின் ஆதரவை தமக்கு அளித்தால் சுயேச்சைகளையும் சேர்த்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. இதனால், ஏழு எம்எல்ஏக்களும் அமைச்சராகவும் காங்கிரஸ் சார்பில் ஆசைகாட்டப்பட்டுள்ளது. இதனால் தான் துஷ்யந்திற்கு நெருக்கடி உருவாகி உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.

முன்னாள் துணை பிரதமரான தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஆவார். ஹரியானாவின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ஆட்சியில் ஆசிரியர் தேர்வாணையத்தின் பல கோடி ஊழல் நடைபெற்றது.

இந்த வழக்கில் தனது மூத்த மகன் அஜய்சிங் சவுதாலாவுடன் சிக்கி சிறையில் உள்ளார் ஓம் பிரகாஷ். இந்த சூழலில் தன் தந்தையுடனான மனக்கசப்பால் தன் மகன் துஷ்யந்தை வைத்து ஜேஜேபியை டிசம்பர் 8, 2018 இல் துவக்கினார் அஜய்சிங்.

இந்நிலையில், நேற்று துஷ்யந்த் நடத்திய ஜேஜேபியின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு நான்கு எம்எல்ஏக்கள் வரவில்லை. இதனால், ஹரியானா மாநில அரசியலில் பிரச்சனைகள் கிளம்பியுள்ளன. இதற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பின் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான சூழல் உருவாகி இருப்பதும் காரணமாகக் கருதப்படுகிறது.

ஹரியானாவின் இப்பிரச்சனை, ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகளில் பாஜகவிற்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இழந்ததன் தாக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஹரியானாவின் இந்த மாற்றத்தால் சுயேச்சை எம்எல்ஏக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதன் பின்னணியில் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹுட்டா மீது பாஜகவினர் புகார் கூறத் துவங்கி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x