Published : 26 Dec 2019 07:41 PM
Last Updated : 26 Dec 2019 07:41 PM
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொய்களின் ராஜா. அசாம் மாநிலத்தில் உள்ள தடுப்புக்காவல் முகாம்கள் காங்கிரஸ் கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டவை என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தினர்.கடந்த சில நாட்களாகத்தான் போராட்டம் குறைந்துள்ளது.
மக்களின் தீவிரமான போராட்டத்துக்குப்பின், என்ஆர்சி நாடுமுழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அளி்த்த பேட்டியில், " அசாம் மாநிலத்தில் தடுப்புக் காவல் முகாம்கள் இல்லை என்று பிரதமர் மோடி பொய் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் பிரதமர் பாரதமாதாவிடம் பொய் பேசியுள்ளார்" என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் கூற்றுக்கு பதிலடி தரும் வகையில் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி பொய்களைப் பேசித்தான் ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். இப்போது தடுப்புக்காவல் முகாம்கள் குறித்து ராகுல் காந்தி பொய்களைப் பரப்புகிறார்.
பிரதமர மோடி என்ன சொன்னார் என்பதை சற்று கவனிக்க வேண்டும், என்ஆர்சி அமல்படுத்தியபின் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் யாரும் அடைப்பதற்காக எந்தவிதமான தடுப்பு முகாம்களும் இல்லை என்று பேசியிருந்தார்
கடந்த 2011-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியிலும், அசாம் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அப்போது வெளிநாட்டவர்கள் குறித்த விவகாரத்தில் அசாமில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு வெள்ளை அறிக்கையை 2012-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் 38-வது பக்கத்தில் தடுப்பு முகாம்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போது 3 தடுப்புக்காவல் முகாம்கள் கோல்பாரா, கோர்ராஜ்கர், சில்சார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கோல்பாரா முகாமில் 66 வெளிநாட்டினரும், கோக்ராஜ்ஹரில் 32 பேரும், சில்சாரில் 20 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆதலால், தடுப்புக்காவல் முகாமுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ராகுல்காந்திக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் எல்லாம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்வார். எந்த துறையிலும் ராகுல்காந்திக்கு அனுபவ அறிவு இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் ராகுல் காந்திக்குப் பேசத் தெரியவில்லை. ஆனால், மோடியைப் பற்றி மட்டும் பேசுகிறார். தேநீர் விற்பனையாளர் பிரதமராகிவிட்டார் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
ராகுல் காந்தி பொய்களின் ராஜா. தேசத்தின் மக்களுக்குப் பொய் பேசுபவரையும், செயல்கள் செய்பவரையும் பிரித்துப் பார்க்கத் தெரியும்
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT