Last Updated : 26 Dec, 2019 05:16 PM

4  

Published : 26 Dec 2019 05:16 PM
Last Updated : 26 Dec 2019 05:16 PM

நிறுத்தம்தான் முற்றுப்புள்ளியல்ல; என்ஆர்சியில் பாஜக நிலைப்பாடு: பிரசாந்த் கிஷோர் சாடல்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் : கோப்புப்படம்

பாட்னா

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரத்தில் பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது தந்திரமான பின்வாங்கல். இது நிறுத்தம்தான், முற்றுப்புள்ளியல்ல என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் சாடியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இருக்கிறது. பிஹாரில் முஸ்லிம்கள் மத்தியில் நிதிஷ் குமார் மிகுந்த செல்வாக்கு மிகுந்த தலைவராக கருதப்படுகிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், என்ஆர்சிக்கும் முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராடினர். ஆனால், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற ஆதரவு அளித்தனர்.

ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் தங்களின் கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ் குமாரிடமும் கட்சி எடுத்துள்ள முடிவு, தேர்தல் நேரத்தில் பாதிக்கும் என்று எச்சரித்தார்.

அதுமட்டுமல்லாமல் என்ஆர்சிக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கும் எதிரான நிலைப்பாடு எடுத்துள்ள பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் போராட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

பிஹாரில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருக்கும் முதல்வர் நிதிஷ் குமார், பிரசாந்த் கிஷோரின் இந்த எதிர்ப்புக்குப் பின் வேறு வழியின்றி, மாநிலத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதாவது நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஜேடியு எம்.பி.க்கள் வாக்களித்துவிட்டு, மாநிலத்தில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது என்று நிதிஷ் குமார் உறுதியளித்தார்

இதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியும் தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று சோனியா காந்திக்கு பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், " என்ஆர்சி குறித்து நாடாளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ விவாதம் நடத்தவில்லை. என்ஆர்சி இப்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது" எனத் தெரிவித்தார்.

இதைச் சுட்டிக்காட்டி, ஜேடியுகட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பாஜகவைச் சீண்டியுள்ளார். அவர் கூறுகையில், "தேசிய குடியுரிமைப் பதிவேட்டைச் செயல்படுத்தமாட்டோம் என்று பாஜக கூறியிருப்பது ஒன்றுமில்லை. அது தந்திரமான பின்வாங்கல். என்ஆர்சிக்கும், சிஏஏக்கும் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. இது தற்போதைய நிறுத்தம்தான், முற்றுப்புள்ளி அல்ல. குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை அரசு காத்திருக்க வேண்டும். சாதகமான நீதிமன்ற உத்தரவு வந்தால், அனைத்து விஷயங்களும் முழுமையாகப் பின்வாங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x