Last Updated : 26 Dec, 2019 01:25 PM

3  

Published : 26 Dec 2019 01:25 PM
Last Updated : 26 Dec 2019 01:25 PM

தீய நோக்கில் பாஜகவின் திட்டம்;என்பிஆர் ஆபத்தானது: ப.சிதம்பரம் கண்டனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்

புதுடெல்லி

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு அனுமதி அளித்துள்ள பாஜகவின் திட்டம் தீங்கானது, 2010-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு திரட்டப்பட்ட தகவல்கள் குறித்த விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு வித்தியாசமானது, ஆபத்தானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கும், என்ஆர்சிக்கும் எதிராக டெல்லி, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப்பிரதேசத்தில் கடந்த 15 நாட்களாகத் தீவிரமான போராட்டம் நடந்தது. இதையடுத்து, நேற்றுமுன் தினம் பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " எனஆர்சி குறித்து எந்தவிதமான விவாதங்களும் நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையில் நடக்கவில்லை.என்ஆர்சி என்பது வேறு தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எனப்படும் என்பிஆர் என்பது வேறு. அனைத்து மாநிலங்களும் என்பிஆர் நடத்த அனுமதிக்க வேண்டும்" எனப் பேசினார்.

மேலும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை நடத்துவதற்காக ரூ.3ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த என்பிஆர் என்பது 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதுதான் கொண்டு வரப்பட்டது என்றும் பாஜக தெரிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் என்பிஆர் குறித்தும், பாஜகவின் திட்டங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு பரந்த, அதிகமான தீங்கான நோக்கம் இருக்கிறது. 2010-தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு நேற்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது ஆபத்தானது .2010 என்பிஆர் உள்ள விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு நடைமுறைப்படுத்துவதும் முற்றிலும் வேறுபாடானது.

பாஜகவின் நோக்கங்களுக்கு நற்சான்று அளிக்க வேண்டுமெனில், அரசு எந்தவிதமான நிபந்தனையும் இன்றி 2010 என்பிஆர் முறைக்கும், வடிவமைப்புக்கும் ஆதரவு அளித்து, சர்ச்சைக்குரிய என்ஆர்சியுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

கடந்த 2010ம் ஆண்டு என்பிஆர் திட்டம் வெளியிடப்பட்ட வீடியோவை பாஜக வெளியிட்டதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வீடியோவை தயவு கூர்ந்து கேளுங்கள். நாங்கள் நாட்டில் உள்ள மக்களைத்தான் கணக்கிடுகிறோம், குடியுரிமையை வலியுறுத்தவில்லை.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகச் சென்னையில் போராடிய 8 ஆயிரம் பேர் மீதும் மதுரையில், 1,300 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அலிகாரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற 1,200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையான அமைதியான முறையில் மக்கள் கூடும் உரிமை நீண்ட நாள் வாழட்டும்.
பலாத்காரம், கொலை, அடித்துக் கொல்லுதல் போன்ற வன்முறைச் சம்பவங்களைக் காட்டிலும், மக்கள் அமைதியான முறையில் கூடி போராட்டம் நடத்துவது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று போலீஸார் நம்புகிறார்கள்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x