Last Updated : 26 Dec, 2019 12:42 PM

 

Published : 26 Dec 2019 12:42 PM
Last Updated : 26 Dec 2019 12:42 PM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க வாய்ப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா : கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லி சட்டப்பேரவையின் காலம் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவதால், அங்கு தேர்தல் நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி 61 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. அங்கு முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளார்.

டெல்லியில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்குப் பின் மாற்றுக்கட்சியாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அமர்ந்து 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த 5 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும், கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் ஏராளமான மோதல்கள், பிரச்சினைகள் வந்தன. ஆனால் அனைத்தையும் நீதிமன்ற உத்தரவுகள் மூலம் கடந்த 5 ஆண்டுகளை கேஜ்ரிவால் நிறைவு செய்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவையின் காலம் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவதால், அதற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்தல் நடத்தும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை இன்று பிற்பகலுக்குப் பின் அறிவிப்பார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் கடந்த 1993-1998 ஆம் ஆண்டுக்குப் பின் பாஜக இன்னும் அங்கு ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஏறக்குறைய 21 ஆண்டுகளாக டெல்லியில் பிடிக்க முயன்றும் அது தோல்வியில் முடிந்தது. காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியைப் பிடித்தது.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் ஆட்சி அமைக்கும் என எண்ணியிருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அமர்ந்தது. இந்த முறை டெல்லியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜக பல்வேறு திட்டங்களை வகுக்கும், பிரச்சாரங்களை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலின்போது, டெல்லியில் பெரும்பாலான தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது, ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு குழப்பங்களால் காங்கிரஸ் கட்சி சம்மதிக்கவில்லை. இதனால், இரு கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம்தான் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது 5 ஆண்டு ஆட்சி குறித்த ரிப்போர்ட் கார்டு வெளியிட்டார். அதில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய வசதிகள்,குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளித்ததாகத் தெரிவித்தார். மேலும், பெண்களுக்குப் பேருந்துகளில் இலவசம் போன்ற திட்டங்களையும் கேஜ்ரிவால் பெருமையாகக் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x