Published : 25 Dec 2019 03:39 PM
Last Updated : 25 Dec 2019 03:39 PM
உத்தரப்பிரதேசத்தின் கோயில் நகரான அயோத்தியில் தீவிரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உத்தரப்பிரதேச போலீஸாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அயோத்தியில் ராம்ஜென்ம பூமி,-பாபர் மசூதி இடையிலான பிரச்சினை நூற்றாண்டு காலமாக நீடித்துவந்தது. அங்குள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக் கொள்ள அனுமதித்து நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், முஸ்லிம்களுக்கு அயோத்தி நகரில் மசூதி கட்டிக்கொள்ளவும் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் இன்னும் 4 மாதங்களில் அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருந்தார்.
இந்நிலையில், ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சமீபத்தில் அவரின் கூட்டாளிகளிடம் டெலிகிராம் செயலி மூலம் பேசிய வீடியோ ஒன்று உளவுத்துறையிடம் சிக்கியுள்ளது. அதில் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாக்குதலை நடத்த வேண்டும் என்றும், அயோத்தி நகரில் தாக்குதலை நடத்த வேண்டும் என்று தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வீடியோவில் மசூத் அசார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதற்கிடையே பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 முக்கியத் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தெரிவிக்கிறது.
தற்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பும், ரோந்துப்பணியும் பலப்படுத்தப்பட்டதால், அங்குத் தீவிரவாதிகள் ஊடுருவும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால், இந்த தீவிரவாதிகள் நேபாள எல்லை வழியாகக் கடந்த மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது.
இந்த தீவிரவாதிகள் 7 பேரும் உத்தரப்பிரதேசம் கோரக்பூர் நகரம், அயோத்தி நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் பதுங்கியுள்ளார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களின் இடத்தை கண்டுபிடிக்கமுடியாமல் உளவுத்துறை திணறி வருகிறது.
உளவுத்துறையின் தீவிர தேடுதல், விசாரணை ஆகியவற்றுக்குப்பின் மொத்தமுள்ள 7 தீவிரவாதிகளில் 5 பேரின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் முகமது யாகூப், அபு ஹம்சா, முகமது ஷான்பாஸ், நிசார் அகமது, முகமது குவாமி சவுத்ரி ஆகியோர் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்த தீவிரவாதிகள் அனைவரும் உள்ளூர் மக்களிடம் வாகன உதவி, ஆயுத உதவிகளைப் பெற்று மாறுவேடத்தில் இருப்பதால், அடையாளம் காணமுடிவதிலும் சிக்கல் இருக்கிறது, எங்குப் பதுங்கி இருக்கிறார்கள் என்பதிலும் சிக்கல் நிலவுகிறது என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து உ.பி. அரசு, அயோத்தி நகருக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது, மேலும், அதுகுறித்து விரிவான ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்ட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT