Published : 25 Dec 2019 08:21 AM
Last Updated : 25 Dec 2019 08:21 AM
இரா.வினோத்
மங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு பதிலடியாக சித்தராமையா போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் வீடியோவை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் கடந்த 19-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மங்களூரு துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மங்களூரு மாநகர காவல் துறை அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் 12 வீடியோ பதிவுகளையும், 10-க்கும் மேற்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் வன்முறையாளர்கள் போலீஸார் மீது கல்வீசும் காட்சிகளும், சிசிடிவி கேமராக்களை உடைப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து மங்களூரு மாவட்ட காவல் ஆணையர் ஹர்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த ஒரு வாரம் முழுக்க காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கு நன்றி. காவல் துறை வெளியிட்டுள்ள வீடியோ, புகைப்படங்களில் இருக்கும் வன்முறையாளர்களைப் பற்றி தகவல் கொடுத்து உதவ வேண்டும். இதுபோன்ற வன்முறை சம்பவங்களின் வீடியோ, புகைப்படம் இருந்தால் காவல் துறையில் ஒப்படையுங்கள்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா, மங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘போலீஸார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுடுகின்றனர்.
அதைப் பார்த்த மற்றொரு போலீஸார், இத்தனை முறை சுட்டும், ஒருவர்கூட சாகவில்லை’’ என பேசுகிறார். இதைக் குறிப்பிட்ட சித்தராமையா, ‘‘அஹிம்சை முறையில் போராடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT