Published : 24 Dec 2019 09:22 PM
Last Updated : 24 Dec 2019 09:22 PM
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய ஜெர்மன் நாட்டு மாணவரை நாட்டை விட்டு அனுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஜெர்மனியின் இருண்ட காலம் இந்தியாவில் வந்துவிடக்கூடாது என்று கண்டித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ஐஐடியில் மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது, அதில் ஜெர்மன் நாட்டு மாணவர் ஜேக்கப் லின்டென்தல் என்பவரும் பங்கேற்று பதாகைகளை ஏந்தி கோஷமிட்டார்.
ஐஐடியில் உள்ள இயற்பியல் துறைக்கு கல்வி பரிமாற்றத் திட்டம் தொடர்பாக ஜேக்கப் வந்திருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், விசா விதிமுறைகளை மீறி ஜெர்மன் மாணவர் ஜேக்கப் போராட்டத்தில் ஈடுபட்டார் எனக் கூறி குடியேற்ற அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேறக் கேட்டுக்கொண்டனர். அவரும் நேற்று இரவு இந்தியாவை விட்டுப் புறப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியில் கடந்த 1933-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை நாஜிக்கள் யூதர்களுக்கு எதிராக அளித்த துன்புறுத்தல்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு அந்தப் பதாகையில் மாணவர் ஜேக்கப் எழுதியிருந்தார். அப்போது சக மாணவர்களிடம் ஜேக்கப் பேசுகையில், யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் தொடக்கத்தில் எடுத்த நடவடிக்கைகள் அதிகமான கவனத்தைப் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெர்மன் மாணவர் ஜேக்கப்பை வெளியேற்றியதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், " உலக வரலாற்றில் ஜெர்மன் நமக்கு இருண்ட காலத்தை நினைவூட்டி வருகிறது. அதுபோன்று இந்தியாவில் நிகழ்ந்துவிடக்கூடாது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய ஜெர்மன் மாணவர் நமது நன்றிக்குரியவர். ஐஐடியின் இயக்குநர் எங்கே, தலைவர் எங்கே, இருவரிடமும் தகவல்களைக் கேட்போம்.
ஐஐடியின் மற்ற மாணவர்கள் எங்கே சென்றார்கள். ஜெர்மன் மாணவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றி, தகவல் கிடைத்த பின் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் " புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரபிஹாவை பட்டமளிப்பு விழாவில் இருந்து வெளியேற்றியது அவரின் உரிமை மீதான அப்பட்டமான தாக்குதல். அந்த மாணவியை வெளியே அனுப்பிய, அனுமதி மறுத்த அதிகாரி யார்? அந்த மாணவியின் உரிமைகளை அந்த அதிகாரி மீறியுள்ளதற்கு பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மாணவி ரபிஹா. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் படித்த அவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டமளிப்பு விழாவுக்கு வந்தபோது, ஹிஜாப் அணிந்தார் என்பதற்காக ரபிஹாவை விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் புறப்பட்ட பிறகே விழா அரங்குக்குள் ரபிஹா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்றிருந்த போதிலும், மேடைக்கு அழைத்தபோது, ரபிஹா தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து விட்டார். பட்டம் மட்டும் பெற்றுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT