Published : 24 Dec 2019 12:51 PM
Last Updated : 24 Dec 2019 12:51 PM
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் என அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டு இருக்கும் பாஜக, தேர்தல் முடிவுகளை சுய பரிசோதனை செய்யும் மனநிலையில் இல்லை என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
ஜார்க்கண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக 25 இடங்களைப் பிடித்து தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மாறாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜக மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. ஹரியாணாவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், துஷ்யந்த் சவுதாலா துணையுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
மாகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக ஆட்சி அமைத்த போதிலும் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையிலான மோதலில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரின் துணையுடன் ஆட்சி அமைத்தாலும் 80 மணிநேரத்தில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது.
பாஜகவின் தொடர் தோல்விகள் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது.
''மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து இந்தி பேசும் மாநிலமான ஜார்க்கண்டிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
ஹரியாணாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியில் இருந்து மீண்டு வந்தது. ஆனால், பாஜகவுக்கு மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை. ஆனால், பாஜகவோ, ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. தேர்தலில் துஷ்யந்த் சவுதாலா கட்சியுடன் எதிராகப் போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தது.
நம்முடைய மக்கள் அரசில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்துவிட்டால், அவர்கள் அதிகாரம், பணம் ஆகியவற்றின் நெருக்கடிக்குப் பணியமாட்டார்கள். இந்த இருதேர்தல் முடிவுகளையும் பாஜக சுய பரிசோதனை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை. மக்களைப் பொருட்படுத்தாமல் இருக்கும்போது என்ன நடக்கும்?
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்திலும் இந்து, முஸ்லிம் வாக்காளர்களைப் பிரிக்கும் நோக்கத்தில் பேசினார், முயன்றார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்து மக்களின் வாக்கு வீதத்தை அதிகரிக்கும் என்று அமித் ஷா எண்ணினார். ஆனால், ஜார்க்கண்ட் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் பாஜகவை வெளியேற்றிவிட்டார்கள்.
கடந்த 2018-ம் ஆண்டில் தேசத்தில் 75 சதவீதப் பகுதிகளை பாஜக ஆட்சி செய்து வந்தது. ஆனால், தற்போது பாஜக ஆட்சி செய்யும் அளவு 30 முதல் 35 சதவீதமாகக் குறைந்துவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டில் 22 மாநிலங்களில் அதாவது திரிபுரா, மிசோரத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்தது.
ஆனால், திரிபுராவில் இன்றைய நிலையில் மீண்டும் அங்கு தேர்தல் நடந்தால், மக்கள் பாஜகவைத் தோற்கடிப்பார்கள். குடியுரிமைச் சட்டத்தால் அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது''.
இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT