Published : 24 Dec 2019 11:36 AM
Last Updated : 24 Dec 2019 11:36 AM
மக்களவைத் தேர்தல்களில் அனைவரையும் ஓரங்கட்டி மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய பாஜக ஜார்கண்ட் தோல்வியையும் சேர்த்து இந்த ஆண்டில் 5 சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது.
ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணி பாஜகவை முறியடித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் வலவான கூட்டணிக்கு முன்பாக பாஜகவினால் வலுவான கூட்டணியை அமைக்க முடியவில்லை.
ஜார்கண்டிலும் மகாராஷ்டிரா போல் முதல்வர் ரகுபர் தாஸ் ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்த 13 பேரை இந்தத் தேர்தலில் டிக்கெட் தராமல் ஒதுக்கினார். இதனையடுத்து கட்சிக்குள் கோஷ்டி பிரிவினைகள் ஏற்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முடிவுகள் வரும்போது ரகுபர் தாஸே தன் கிழக்கு ஜாம்ஷெட் பூரில் தோல்வியடைந்தது, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியளித்தாலும் அங்கு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்று தெரிகிறது.
மேலும் ஜார்கண்டின் முதல் பழங்குடியினர் சாராத முதல்வராக இருந்து கொண்டே ரகுபர் தாஸ் சோட்டா நாக்பூர் வாடகைதாரர் சட்டம், சந்தால் பர்கனா வாடகைதாரர் சட்டம் என்று நிலம் கையகப்படுத்தல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்தது. பழங்குடியினர் மற்றும் பிற பிரிவினருக்கு இடையே பிளவை ஏற்படுத்தியது. இது எதிர்க்கட்சியினரின் தேர்தல் துருப்புச் சீட்டானது.
லோக்சபா தேர்தலில் இந்த விவகாரங்கள் தலைதூக்காததால் பாஜக வென்றது, ஆனால் மாநில தேர்தல்களில் உள் மாநில விவகாரங்கள் பெரிதாக தாக்கம் செலுத்துவதையே முடிவுகள் காட்டுவதாக அரசியல் வல்லுனர் ராகுல் வர்மா தெரிவித்தார்.
லோக்சபாவில் அசைக்க முடியாத மாபெரும் வெற்றி, ஆனால் சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வி இதை எப்படிப் பார்ப்பது என்பதற்கு அரசியல் வல்லுனர் ராகுல் வர்மா கூறும் காரணம் என்னவெனில், “லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி என்ற ஒரு வாக்கு வங்கி அசாதரண முறையில் வாக்குகளைப் பெறும் ஒரு சக்தி. இந்த ஆதாரம் பாஜகவின் மாநிலக் கிளைகளுக்குக் கிடையாது.
தேசியத் தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் பிறர் என்பது போல் தேர்தல் இருக்கிறது. ஆனால் மாநிலத் தேர்தல்களில் மோடியின் முகத்திற்கு அவ்வளவு வாக்கு வங்கி இல்லை. பாஜகவின் மாநில கிளையை எதிர்கொள்வது எதிர்க்கட்சிகளுக்கு எளிதாக உள்ளது, குறிப்பாக சரியான கூட்டணி அமைத்து பாஜகவை முறியடிக்க முடிகிறது.
ஆனால் இதற்காக தேசிய அளவில் எழும் பிரச்சினைகள் இதில் தாக்கம் செலுத்தவில்லை என்று அர்த்தமல்ல, பொருளாதார நிலை, தொழிற்கூடங்கள் மூடப்பட்டு வேலையின்மை அதிகரிப்பு போன்றவைகளும் மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைவதற்கு பங்களிப்பு செய்கின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT