Published : 23 Dec 2019 01:33 PM
Last Updated : 23 Dec 2019 01:33 PM
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான ரகுபர் தாஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட பாஜக போட்டி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சரயு ராய் முன்னிலை பெற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.
இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனாதா தளம் கூட்டணி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், ஆளும் பாஜக 29 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக போட்டி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சரயு ராய் போட்டியிட்டார்.தொடக்கத்தில் முன்னிலையில் சென்ற முதல்வர் ரகுபர் தாஸ், நண்பகல் 1 மணி நிலவரப்படி 700க்கும் மேற்பட்ட வாக்குகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளார் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன்படி, ரகுபர் தாஸ் 13 ஆயிரத்து 708 வாக்குகளுடனும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரயு ராய் 14 ஆயிரத்து 479 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான சரயு ராய்க்கு இந்தத் தேர்தலில் இடம் வழங்க பாஜக தலைமை மறுத்துவிட்டது. அதனால், சுயேச்சையாக முதல்வர் ரகுபர் தாஸை எதிர்த்துக் களமிறங்கி, தற்போது கடும் போட்டியாளராக உருவாகியுள்ளார்.
அதேபோல ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பார்ஹெத் தொகுதியில் 8,616 வாக்குகளில் முன்னிலையுடனும், தும்கா தொகுதியில் 3,188 வாக்குகள் பின்னடைவிலும் சென்றுள்ளார்.
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் தலைவர் பாபுலால் மாரண்டி தான்வார் தொகுதியில் 9 ,416 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT