Last Updated : 23 Dec, 2019 01:14 PM

 

Published : 23 Dec 2019 01:14 PM
Last Updated : 23 Dec 2019 01:14 PM

போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் போலீஸார் தாக்கினர்; எனது ஒரு பக்க பார்வை பறிபோனது: ஜாமியா மிலியா பல்கலை.மாணவர் பேட்டி

ஜாமிலியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், போலீஸார் தடியடியில் ஒரு பக்க பார்வையை இழந்த மாணவர் முகம்மது மின்ஹாஜுதீன்.

புதுடெல்லி

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் போலீஸார் தாக்கினர். எனது ஒரு பக்க பார்வை பறிபோனது என்று ஜாமியா மிலியா பல்கலை. மாணவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கடந்த டிசம்பர் 15-ம் தேதி அன்று இரவு போராட்டத்தில் வெளியாட்களும் கலந்து கொண்டதாக, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடிப் பிரயோகம் நடத்தினர். இது போராட்டத்தில் பங்கேற்காத மாணவர்களையும் பாதித்துள்ளது.

நூலக அறையிலிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் சில மாணவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் மனிதவள மேம்பாட்டுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

போலீஸாரின் தாக்குதலுக்கு தனது ஒரு பக்கத்தின் பார்வையைப் பறிகொடுத்த முகம்மது மின்ஹாஜுதீன் கூறியதாவது:

''தேசிய தலைநகரில் எனது சட்டப் பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் கடந்த ஆண்டு பிஹாரிலிருந்து படிப்பதற்காக டெல்லிக்கு வந்திருந்தேன். ஆனால், எனது இந்த முடிவுக்காக நான் இப்போது வருத்தப்படுகிறேன். பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளியாட்கள் நுழைந்திருப்பதாகக் கூறிதான் போலீஸார் வந்தனர். ஆனால் அவர்கள் மாணவர்களையே குறிவைத்துத் தாக்கினர். அது மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபடாமல் வளாகத்தின் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களையும் அவர்கள் தாக்கினர்.

நான் செய்த தவறு என்ன? நான் பழைய நூலகத்தில் எம்ஃபில் மற்றும் பிஎச்.டி. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாசிப்பு அறையில் படித்துக் கொண்டிருந்தேன். போலீஸார் வளாகத்திற்குள் நுழைந்ததை அறிந்த பிறகு நாங்கள் வாசிப்பு அறையைப் பூட்டியிருந்தோம். ஆனால், அவர்கள் உள்ளே நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

போலீஸ் நடவடிக்கையால் டிசம்பர் 15 ஆம் தேதி சம்பவத்துக்குப் பிறகு ஒரு கண்ணில் பார்வையை இழந்துவிட்டேன்.

என் மற்ற கண்ணிலும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, என் கைகளைச் சுத்தம் செய்ய ஒரு சானிடிசரைப் பயன்படுத்துவதன் மூலமும், என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் நான் கவனித்து வருகிறேன்,

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் வளாகத்திற்கு வரவில்லை. முதலாம் ஆண்டு எல்எல்எம் சட்டப்படிப்பைப் பயிலும் நான் இனி பல்கலைக்கழக வளாகத்தில் கூட பாதுகாப்பாக உணரமுடியாது என்று உணர்கிறேன். எனக்கு பயமாக இருக்கிறது. நான் ஒருபோதும் பயமின்றி நூலகத்திற்குள் நுழைய முடியாது. எனது வளாகத்தில் நான் பாதுகாப்பாக உணரவில்லை,

நான் எனது பிஎச்டி படிப்பை முடித்து, பின்னர் எனது சொந்த ஊரில் சட்டப் பயிற்சியைத் தொடங்குவேன். முன்னதாக, ஆறு மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகளுடன் உச்ச நீதிமன்றம் இங்கு இருப்பதால் நான் டெல்லியில் பயிற்சி செய்ய விரும்பினேன். ஆனால் இதற்குப் பிறகு, இங்கு வேலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை''.

இவ்வாறு முகம்மது மின்ஹாஜுதீன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x