Published : 22 Dec 2019 03:23 PM
Last Updated : 22 Dec 2019 03:23 PM
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து இந்த தேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டனர் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல , காங்கிரஸ் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறது என்று பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
உ.பி.யில் கடந்த இரு நாட்களாக இந்தச் சட்டத்துக்கு எதிராக நிகழ்ந்த போராட்டம், வன்முறையில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், பதற்றம் குறையவில்லை. இந்தச் சூழலில் குடியுரிமைச் சட்டம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடந்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதற்குப் பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "அன்பார்ந்த இளைஞர்களே! பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை அழித்துவிட்டார்கள்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாததால் ஏற்பட்டுள்ள உங்கள் கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. அதனால்தான் மோடியும், அமித் ஷாவும், வெறுப்பின் பின்புறம் மறைந்து கொண்டு, அன்புக்குரிய நம்முடைய தேசத்தைப் பிரிக்கிறார்கள். ஒவ்வொரு இந்தியர் மீதும் அன்பால் பதில் அளித்தால் மட்டுமே நாம் அவர்களை வீழ்த்த முடியும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT